

மும்பையில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும் இந்திய-தென் ஆப்பிரிக்க 5-வது ஒருநாள் போட்டியிலிருந்து பாக். நடுவர் அலீம் தார் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார். சிவசேனா எதிர்ப்பைத் தொடர்ந்து ஐசிசி இந்த முடிவை எட்டியது.
முதல் 3 ஒருநாள் போட்டிகளில் அலீம் தார் நடுவராக பணியாற்றினார்.
அதே போல் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள், வாசிம் அக்ரம் மற்றும் ஷோயப் அக்தர் ஆகியோரும் வர்னணையாளர் பணியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கான் ஆகியோரிடையே பேச்சு வார்த்தை கூடாது என்று சிவசேனா மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலத்துக்குள் நுழைந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து மும்பை ஒருநாள் போட்டியின் போது மேலும் இத்தகைய ஆர்பாட்டங்கள் நடைபெறலாம் என்பதைக் கருத்தில் கொண்டு வாசிம் அக்ரம், மற்றும் ஷோயப் அக்தர் ஆகியோர் வர்ணனையிலிருந்து விலகியுள்ளனர்.
சென்னையில் நடைபெறும் 4-வது ஒரு நாள் போட்டியில் இருவரும் வர்ணனையை முடித்துக் கொண்டு அக்டோபர் 23-ம் தேதி பாகிஸ்தான் திரும்புகின்றனர்.