

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று 4வது ஒருநாள் போட்டி நடை பெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் தொடரை இழக்கும் நிலை உள்ளதால் தோனி தலைமையிலான இந்திய அணி நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
கான்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடைபெற்ற 2 வது ஆட்டத்தில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஜ்கோட்டில் நடந்த 3 வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரில் 2 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணி களும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று 4வது ஆட்டத்தில் மோதுகின் றன. பிற்பகல் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி சொந்த மண்ணில் முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரை இழக்க நேரிடும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை குழப்பங்களாலேயே கான்பூர் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த போட்டிகளில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
கோலி, ரஹானே இடையே 3வது வீரராக களமிறங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் பேட்டிங் வரிசையில் மாறி இறங்கினால் ரன்சேர்க்க கடுமையாக திணறுகின்றனர். போதாத குறையாக தோனி 4வது வீரராக ஆடுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 2வது ஆட்டத்தில் 92 ரன் விளாசிய தோனி அடுத்த ஆட்டத்தில் ரன் சேர்க்க மிகுந்த சிரமப்பட்டார்.
இந்த சிக்கல்கலுக்கு இன்றைய ஆட்டத்தில் முடிவு கட்டப்படும் என தெரிகிறது. ஷிகர்தவன் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரஹானே ஆடவாய்ப்புள்ளது. ஷிகர்தவன் 3 ஆட்டத்தில் 59 ரன் மட்டுமே எடுத்துள்ளார். 6வது வீரராக களமிறங்கி ஆடிவரும் ரெய்னாவின் மோசமான பார்மும் அணிக்கு பாதகமாக உள்ளது. இந்த தொடரில் அவர் வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
இதனால் ரெய்னாவுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. இன்றைய ஆட்டத் தில் ஷிகர்தவன் நீக்கப்பட்டால் குர்கீரத்சிங் அறிமுக வீரராக ஆட வாய்ப்பு உள்ளது. புவனேஷ்வர் குமாருடன் வேகப்பந்து வீச்சில் நாத் அரவிந்த் இடம் பெறக்கூடும். இதனால் மோகித் சர்மா நீக்கப்படலாம்.
தென் ஆப்பிரிக்க அணி முக்கிய வீரர்களின் காயங்களால் கவலையடைந்துள்ளது. ஆல் ரவுண்டர் டுமினி கையில் காயம் ஏற்பட்டதால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற் கெனவே வேகப்பந்து வீச்சாளர் மோர்ன் மோர்கலும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பேட்டிங் கில் குயின்டன் டி காக் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. டுமினிக்கு பதிலாக டீன் எல்கார் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.
தொடரை கைப்பற்றும் முனைப் பில் தென் ஆப்பிரிக்கா அணியும், தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணியும் முழு திறனை வெளிப்படுத்தும் என்பதால் இன் றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
அணி விவரம்
இந்தியா:
தோனி(கேப்டன்), ஷிகர் தவன், ரோகித் சர்மா, ரஹானே, கோலி, ரெய்னா, அம்பாட்டி ராயுடு, ஸ்டுவர்ட் பின்னி, அக்ஸர் படேல், ஹர்பஜன்சிங், அமித் மிஸ்ரா, குர்கீரத்சிங், மோகித் சர்மா, புவனேஷ்வர் குமார், அரவிந்த்.
தென் ஆப்ரிக்கா:
டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஆம்லா, குயின்டன் டி காக், டுபிளெஸ்சி, டீன் எல்கார், டேவிட் மில்லர், பெஹர்தின், கிறிஸ்மோரிஸ், இம்ரன் தாகிர், சோன்டு, ஸ்டெயின், மோர்கல், அபோட், ரபாடா, பாங்கிசோ.
அமித் மிஸ்ரா சந்தேகம்
சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தனது தோழி ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக பெங்களூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அமித் மிஸ்ரா ஆடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.
என்ன சொல்றாங்க...
ஹர்பஜன் சிங்:
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய போதும் முடிவு எதிரணியின் பக்கம் சென்று விட்டது. அதனால் இந்த ஆட்டத்தில் முழு திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுவோம். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்போம். சென்னை ஆட்டத்தில் அமித் மிஸ்ரா விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஸ்டெயின்:
இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்ப நிச்சயம் முயற்சிக்கும். எனினும் நாங்கள் சிறப்பாக ஆடி தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வேகப்பந்து வீச்சுதான் எங்களது ஆயுதம். அணியில் உள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களுமே 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர்கள்.
மைதானம் ஒரு பார்வை
* 1987 அக்டோபர் 9ல் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியா 1 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது.
* 19 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்திய அணி 10 ஆட்டத்தில் விளையாடி 5ல் வெற்றி பெற்றது. 4ல் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
* தென் ஆப்பிரிக்க அணி சேப்பாக்கத்தில் 2 வது முறையாக விளையாட உள்ளது. 2011 உலக கோப்பையில் அந்த அணி இங்கிலாந்துடன் மோதி 6 ரன்னில் தோற்றது.
* இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் 2005ல் மோத இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது முதல் முறையாக மோத உள்ளன.
* பாகிஸ்தான் அணி 1997 ல் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். ஆசிய லெவன் அணி 2007 ல் 337 ரன் குவித்தது. இந்திய அணி அதிகபட்சமாக இங்கு 292 ரன் எடுத்து இருந்தது.
* 2011 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கென்யா 69 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோர்.
* 1997ல் பாகிஸ்தானின் சையத் அன்வர் 194 ரன் குவித்ததே தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர்.
* தோனி, யுவராஜ், டிராவிட், மனோஜ் திவாரி (இந்தியா), மார்க்வாக், ஜெப் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஜெயவர்த்தனே (இலங்கை), நசீர் ஜாம்ஷெத் (பாகிஸ்தான்), ஹாரிஸ் (நியூசிலாந்து), பொல்லார்ட் (மேற்கிந்தியத்தீவு) ஆகிய வீரர்களும் சேப்பாக்கத்தில் சதம் அடித்துள்ளனர்.
* சேப்பாக்கம் மைதானம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருக்கும்.