

2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முஷ்டாக் அலி டி20 போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய ஒரே ஓவரில் 21 ரன்கள் விளாசி அசரவைத்துள்ளார்.
சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கு தயாராகும் பொருட்டு மும்பை அணி சார்பில் பயிற்சி ஆட்டம் நடந்தது. இதில் பி அணி மற்றும் டி அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இதில் பி அணிக்கு சூர்யகுமாரும், டி அணிக்கு யாஹஸ்வி ஜெய்ஸ்வாலும் கேப்டனாகப் பொறுப்பேற்றிருந்தனர்.
இதில் பி அணியின் கேப்டன் சூர்யகுமார் 3-வது வீரராகக் களமிறங்கி டி அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரி, 9 சிக்ஸர் அடங்கும். இதில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய 13-வது ஓவரில் சிஸ்கர், பவுண்டரி என 21 ரன்களை சூர்யகுமார் விளாசினார்.
சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டத்தால் பி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் விளாசியது. அர்ஜூன் டெண்டுல்கர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் தலைமையிலான பி அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று கலக்கிய சூர்யகுமார் யாதவ், 14 போட்டிகளில் 480 ரன்கள் குவித்தார். இருந்தும், அவரை ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யவில்லை என்பது அதிர்ச்சிக்குரியதாக இருந்தது.
ஒரு சர்வதேச பேட்ஸ்மேனாக உருவாவதற்கான அனைத்துத் தகுதிகளும் சூர்யகுமார் யாதவுக்கு இருந்தபோதிலும் தொடர்ந்து பிசிசிஐ தேர்வுக்குழுவினர் தேர்வு செய்ய மறுத்து வருகின்றனர்.
மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கடந்த 3 ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடிக் கொடுத்துள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள், 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 480க்கும் மேற்பட்ட ரன்கள், இந்தத் தொடரில் இதுவரை 350க்கும் மேற்பட்ட ரன்களை சூர்யகுமார் யாதவ் சேர்த்துள்ளார்.
ஆனாலும், சூர்யகுமார் யாதவை பிசிசிஐ தேர்வுக்குழு ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்யவில்லை. சூர்யகுமாரின் ஆட்டத்தைப் பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் சச்சின், சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆறுதல் தெரிவித்துப் பாராட்டி இருந்தனர்.