

மும்பை ஒருநாள் போட்டியில் சற்றும் எதிர்பாராத வகையில் இந்தியப் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்கா பேட்டிங் புரட்டி எடுத்தது. டி காக், டுபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ் மைதானம் முழுக்க பந்துவீச்சை சிதறடிக்க தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 438 ரன்கள் குவித்தது.
2015-ல் மட்டும் 400க்கும் அதிகமான 4-வது ஸ்கோரை தென் ஆப்பிரிக்கா இன்று எட்டியது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 3 வீரர்கள் சதம் கண்டனர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது பெரிய ஸ்கோராகும். இந்திய மண்ணில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரும் இதுவே.
3 தென் ஆப்பிரிக்க வீரர்களுடன் இந்திய அணியின் புவனேஷ் குமாரும் பந்து வீச்சில் சதம் கண்டார். இவர் 10 ஓவர்களில் 106 ரன்கள் கொடுத்து டிவில்லியர்ஸ் விக்கெட்டைக் கைப்பற்றினார். இதில் புவனேஷ் குமார் 12 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் வாரி வழங்கினார். மோஹித் சர்மா நல்ல வேளையாக தனது ஓவர்களை முடிக்கவில்லை இவர் 7 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்தார். மேலும் வீசாததால் சத வாய்ப்பை இழந்தார். ஹர்பஜன் சிங் சில ஓவர்களை நன்றாக வீசினாலும் அவரும் 10 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்தார். இவர்தான் குறைவாக ரன்களை விட்டுக் கொடுத்தது என்றால் தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்தையும் ஆக்ரோஷத்தையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அக்சர் படேல் 8 ஓவர்கள் வீசி 5பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 65 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
நல்ல பிட்சில் டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்காவின் அதிர்ஷ்டம் என்றாலும், இந்தியப் பந்து வீச்சு வெறிகொண்ட பேட்டிங்குக்கு முன்னால் சரணடைந்தது என்றே கூற வேண்டும், டி காக் 87 பந்துகளில் 17 பவுண்டரி ஒரு சிக்சருடன் 109 ரன்களையும் டுபிளெஸ்ஸிஸ் 115 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 133 ரன்களையும் விளாசித் தள்ள, இந்தியப் பந்துவீச்சுக்கு எள்ளளவு மரியாதையும் காட்டாத டிவில்லியர்ஸ் 61 பந்துகளில் 3 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 119 ரன்கள் விளாசி எடுத்தார்.
438 ரன்களில் மொத்தம் 38 பவுண்டரிகளும், 20 சிக்சர்களும் விளாசப்பட்டன, அதாவது 272 ரன்கள் பவுண்டரி, சிக்சர்களில் எடுக்கப்பட்டது. மொத்தம் 300 பந்துகளில் 111 பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. மீதி 189 பந்துகளில் 438 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது என்றால், அதிலும் பவுண்டரி சிக்சர்கள் மூலம் 272 ரன்கள் என்றால் இதன் கணக்கு 58 பந்துகள்; மீதமுள்ள 131 பந்துகளில் 166 ரன்கள் பவுண்டரிகள் சிக்சர்கள் இல்லாமலேயே எடுக்கப்பட்டுள்ளது என்று பொருள். இதற்கு மேல் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கையோ, அதிரடியையோ, இந்தியப் பந்து வீச்சின் பலவீனத்தையோ வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றே கூற வேண்டும்.
பார்ட்னர்ஷிப்புகள்:
முதலில் டி காக், டுபிளெஸ்ஸிஸ் இடையே 22.5 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 154 ரன்கள் சேர்க்கப்பட்டது. 26.5 ஓவர்களில் 187 இருந்த போது டி காக் ரெய்னாவிடம் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் களமிறங்கினார். இப்போது ஆட்டம் தாறுமாறாக மாறியது. 17.1 ஓவர்களில் டுபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ் ஜோடி 164 ரன்களை சேர்த்தனர். டுபிளெஸ்ஸிஸ் 115 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 133 ரன்கள் விளாசித் தள்ளி கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட ரிட்டையர்டு ஆனார். எனவே முடிவுறாத 3-வது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் மில்லருடன் தொடர்ந்தது. இவர்கள் இருவரும் 2.4 ஓவர்களில் மேலும் 47 ரன்களைச் சேர்க்க மொத்தமாக 3-வது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் 211 ரன்கள். இதில் டிவில்லியர்ஸ் பங்களிப்பு 61 பந்துகளில் 119 ரன்கள்.
தென் ஆப்பிரிக்கா ரன் சேர்த்த விவரம்:
முதல் 10 ஓவர்கள்: 73/1
20-வது ஓவர் முடிவில்: 142/1
30-வது ஓவர் முடிவில்: 209/2
40-வது ஓவர் முடிவில் 294/2
50-வது ஓவர் முடிவில் 438/4
கடைசி 20 ஓவர்களில் 229 ரன்கள். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் 144 ரன்கள்.
பயனளிக்காத ஷார்ட் பிட்ச் உத்தி:
ஷார்ட் பிட்ச் பந்துகளை அதிகம் நம்பியது இந்திய பந்துவீச்சு, இதுதான் முதல் கோணல் பிறகு முற்றிலும் கோணலானது. வேகமில்லாமல் புவனேஷ், மோஹித் சர்மா ஷார்ட் பிட்ச் பந்தை வீசினால் அது கேலிக்கூத்தாக போய் முடிந்தது. கடைசியில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளை விவ் ரிச்சர்ட்ஸ் ஆன டிவில்லியர்ஸ் வெங்கலக் கடையில் யானை புகுந்தது போல் புகுந்து விளையாடினார்.
ஒரு நேரத்தில் எங்கு போட்டாலும் சிக்ஸ் என்ற நிலைமை இருந்தது. அதுவும் மோஹித் சர்மாவை ஒரு சிக்சரை ஸ்கொயர் லெக்கில் அடிக்கும் போது கிட்டத்தட்ட பவுலர் ஏதோ ஸ்கொயர் லெக்கிலிருந்து வந்து வீசுவது போல் திரும்பிக் கொண்டு விளாசினார். ஒரு முனையில் கால் தசைப் பிடிப்புடன் ஒரு காலில் சிக்சர்களை விளாசிக் கொண்டிருந்த டுபிளெஸ்ஸி. மறுபுறம் ஒரு கை, அரைக்கையில் கூட பவுண்டரிகளை விளாச முடியும் என்று காட்டிய டிவில்லியர்ஸ். என்ன செய்ய முடியும் தோனியினால் மட்டும்தான்?
7-வது ஓவர் ஹர்பஜன் சிங் பந்து வீச வந்தவுடன் நிலைமைகள் கொஞ்சம் சாந்தமடைவது போல் தெரிந்தாலும் மறுமுனையில் டுபிளெஸ்ஸிக்கு புவனேஷ் குமார் அசட்டுத் தனமாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தார். இதனால் 15-வது ஓவரில் ஸ்கோர் 100-ஐ எட்டியது.
இந்நிலையில் டி காக் 58 ரன்களில் இருந்த போது அமித் மிஸ்ரா பந்தில் தவறாகக் கணித்து கேட்ச் ஒன்றை மிட் ஆனில் கோட்டை விட்டாஅர் மோஹித் சர்மா.
இதன் பிறகு சீராக பவுண்டரிகளை விளாசினார் டி காக் 78வது பந்தில் சதம் கண்டார்.
டி காக் கேட்ச் கொடுத்து வெளியேறிய பிறகே டுபிளெஸ்ஸிஸ் புகுந்தார். அதாவது அக்சர் படேலை எக்ஸ்ட்ரா கவரில் ஒரு அபாரமான சிக்ஸருடன் புகுந்தார், அனைத்தும் அதன் பிறகு ரன் விருந்துதான்.
தென் ஆப்பிரிக்காவின் இந்தத் தொடரின் ஆகச்சிறந்த பேட்ஸ்மென்கள் கிரீசில் இருக்கும் போது, விராட் கோலியையும் ரெய்னாவையும் கொண்டு வந்தார் தோனி. ஒரு அணி நெருக்கடியில் இருக்கும்போதுதான் பகுதி நேர வீச்சாளர்களை வைத்து வீச முடியும், மைதானத்தில் பந்துகள் பறக்கும் போது பகுதி நேர வீச்சாளர்களை தோனி நம்பியிருக்க கூடாது ஆனால் அவரும் என்னதான் செய்வார்?
டிவில்லியர்ஸ் 34 பந்துகளில் அரைசதம் கண்டார். டுபிளெஸ்ஸிசும் டிவில்லியர்ஸுடன் இணைந்து அடிக்கத் தொடங்கினார் இதனையடுத்து 61 பந்துகளில் அரைசதம் எடுத்த டுபிளெஸ்ஸிஸ் அதன் பிறகு 44 பந்துகளில் சதத்தை எட்டினார்.
கடைசி 10 ஓவர்கள் தொடங்கும் நிலையில் தென் ஆப்பிரிக்கா 294/2 என்று இருந்தனர். அக்சர் படேல் வீசிய 43-வது ஓவரில் 24 ரன்கள் விளாசப்பட்டது. ஒரு கால் முடியாவிட்டாலும் அவரால் தொடர்ச்சியாக சிக்சர்களாக அடித்துத் தள்ள முடிந்தது. ஒரு நேரத்தில் 133 ரன்களில் இருந்தபோது அவரால் முடியவில்லை ரிட்டையர்டு ஆனார்.
அதன் பிறகு ஏ.பி.டி. பிடித்துக் கொண்டார், அவரது சதம் 57-வது பந்தில் வந்தது. பிறகு 61 பந்துகளில் 11 சிக்சர்களுடன் 119 ரன்கள் சேர்த்த டிவில்லியர்ஸ் கடந்த போட்டி போலவே புவனேஷ் குமாரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு பெஹார்டீனுக்கு ரெய்னா லாங் ஆஃப்பில் கேட்ச் விட்டார். இருவரும் ஸ்கோரை 438 ரன்களுக்கு உயர்த்தினர். முதன் முறையாக இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தும் அபார வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா பெற்றது.