மீண்டும் ஜடேஜா உக்கிரம்: 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

மீண்டும் ஜடேஜா உக்கிரம்: 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்
Updated on
1 min read

ராஜ்கோட்டில் சவுராஷ்டிரா-ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 168 ரன்களுக்குச் சுருண்டது.

இதற்கு முந்தைய போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜடேஜா, மீண்டும் தற்போது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கிய இந்த ரஞ்சி போட்டியில் ஜார்கண்ட் கேப்டன் வருண் ஆரோன் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் 95/2 என்ற நிலையிலிருந்து ஜடேஜாவின் இடது கை சுழற்பந்து வீச்சுக்கு வரிசையாக பேட்ஸ்மென்கள் அவுட் ஆக ஜார்கண்ட் 168 ரன்களுக்குச் சுருண்டது.

ஆனால், விக்கெட்டுகளின் இந்த அணிவகுப்பிலும் இஷான் கிஷன் என்ற ஜார்கண்ட் அணியின் 17 வயது வீரர், அசாத்திய ஆட்டம் ஆடினார், அவர் 69 பந்துகளை மட்டுமே சந்தித்து 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 87 ரன்கள் விளாசி ஜடேஜா பந்தில் உனட்கட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 120 ரன்களே. இதில் 87 ரன்களை அவர் விளாசித் தள்ளினார். இஷான் கிஷன், நீமத், பிறகு நதீம், வருண் ஆரோன், குவாத்ரி, விக்ரம் ஆகிய பின் கள வீரர்களை ஜடேஜா வீழ்த்தினார்.

இடையில் ஜக்கி, தியோபிராட், கவுஷல் சிங், வீரத் சிங் ஆகிய நடுவரிசை வீரர்களை மக்வானா வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜடேஜா 19.5 ஓவர்களில் 71 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மக்வானா 18 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் சவுராஷ்டிரா அணியும் 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆனால் பேட்டிங்கிலும் ரவீந்திர ஜடேஜா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் ஆடி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in