

ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு எட்டாமல் இருந்த தங்கப் பதக்கத்தை எட்ட வைத்தவர் என்ற பெருமை நீரஜ் சோப்ராவுக்கு உண்டு. 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, 2017-ம் ஆண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்த பெருமை நீரஜ் சோப்ராவுக்கு உண்டு. இந்த தங்க மகனின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 24).
ஹரியாணாவில் உள்ள காண்டிரா கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாக நீரஜ் சோப்ரா பிறந்தார். நீரஜ்ஜின் பாட்டிக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்பதால், எந்த நேரமும் ஏதாவது பலகாரங்களைச் செய்து அவருக்கு கொடுத்துவந்தார். இதனால் சிறு வயதிலேயே நீரஜ் சோப்ராவின் உடல் எடை கூடியது. 11 வயதில் 80 கிலோ எடைகொண்ட சிறுவனாக நீரஜ் வளர்ந்தார்.
இந்நிலையில் எடையைக் குறைப்பதற்காக தினமும் மைதானத்தில் நீரஜ்ஜை ஓடச் செய்வார் அவரது தந்தை சதீஷ் குமார். ஒரு நாள் அப்படி ஓடிக்கொண்டு இருந்தபோது பானிபட்டைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர். நீரஜ்ஜின் உடல் வாகு ஈட்டி எறிவதற்கு ஏற்றதாய் இருந்ததால் அவருக்கு பயிற்சி அளிக்க விரும்பினார். அவரின் தந்தையிடம் இதற்கு ஒப்புதல் கேட்க, அவரும் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய்வீரின் மேற்பார்வையில் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா, உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை பல வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஈட்டி எறியும் போட்டிகளில் வல்லவரும், 100 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை எறிந்தவருமான உவே ஹான், தற்போது நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவரது மேற்பார்வையில் வரும் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்ப்போம்.