Last Updated : 23 Dec, 2020 04:44 PM

 

Published : 23 Dec 2020 04:44 PM
Last Updated : 23 Dec 2020 04:44 PM

அமித் ஷா மகனுக்கு புதிய பதவி; ஐபிஎல் தொடரில் அதானி உள்ளிட்ட 10 அணிகள்: விவாதிக்க நாளை கூடுகிறது பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா : கோப்புப்படம்

அகமதாபாத், பிடிஐ

ஐபிஎல் டி-20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக்குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்பட பல்வேறு முடிவுகளை எடுக்க பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாளை( 24-ம் தேதி) கூடுகிறது.

பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா எந்தவிதமான எதிர்ப்பும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் நாளை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக பதவி ஏற்க உள்ளார். ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் தலைவராக பிரிஜேஸ் படேல் தொடர்கிறார்.

நாளை நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மீது எழுந்திருக்கும் இரட்டைப்பதவி ஆதாயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்படும் எனத் தெரிகிறது.

பிசிசிஐ தலைவராக இருந்து கொண்டு பல்வேறு விளம்பரங்களில் கங்குலி நடித்து வருகிறார். அதுகுறித்து கங்குலி ஏந்த பதிலும் தெரிவிக்காவிட்டால் அவரிடம் முறையாக விளக்கம் கோரப்படும்.

2022-ம் ஆண்டில் நடக்கும் ஐபிஎல் தொடரில் 10 அணிகளைச் சேர்ப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நாளை நடக்கும் எனத் தெரிகிறது. தற்போது 8 அணிகள் ஐபிஎல் தொடரில் இருக்கும்போது இது 10 அணிகளாக உயர்த்தப்பட உள்ளது.

கோப்புப்படம்

அதானி குழுமம், மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமத்தினர் இரு புதிய அணிகளுக்கு ஆர்வமாக இருக்கின்றனர். இரு அணிகளுமே அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

அடுத்த ஆண்டே அனுமதியளித்தால், அவசர, அவசரமாக ஏலத்தை நடத்த வேண்டும், வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், 2022ம் ஆண்டிலிருந்து 10 அணிகளை சேர்ப்பது குறித்து பேசப்படுகிறது. 2022-ம் ஆண்டில் 10 அணிகள் பங்கேற்றால் 94 போட்டிகள் நடக்கும்.

2021-ம் ஆண்டில் அக்டோபர் நவம்பரில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் நடக்கிறது. இந்தத் தொடரில் ஐசிசி அமைப்புக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரி பிசிசிஐ அமைப்பிடம் கேட்டிருந்தது. அந்தக் காலக்கெடு முடிய இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால், அதுகுறித்து ஆலோசிக்கப்படும்.

சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இருக்கும் சட்டங்களின்படி ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு வரிவிலக்கு அளிக்க இடமில்லை. இதுகுறித்து பிசிசிஐ பொதுக்குழுவில் பேசப்படும்.

ஐசிசி தொடர்பான பல்வேறு விவகாரங்களில் பிசிசிஐ சார்பில் பங்கேற்க பிரதிநிதி தேர்வு செய்யப்பட வேண்டும். நாளை கூட்டத்தில் பிசிசிஐ செயலாளரும் அமித் ஷா மகனுமான ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த அணியின் தேர்வுக் குழுவுக்கு நிர்வாகிகள் இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் கிரிக்கெட் குழுவுக்கும், நிலைக்குழுவுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவி்ல்லை. இவற்றுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இந்திய அணி 2021-ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டுப் பயணங்கள், 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் பேசப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x