Last Updated : 23 Dec, 2020 01:35 PM

 

Published : 23 Dec 2020 01:35 PM
Last Updated : 23 Dec 2020 01:35 PM

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜேட்லி சிலை வைக்க பிஷன் சிங் பேடி எதிர்ப்பு: என் பெயரை நீக்கிவிடுங்கள், ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அமைப்பு, பெரோ ஷா கோட்லா மைதானத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் சிலையை வைப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

என்னை கவுரவிக்க அரங்கில் எழுதப்பட்டிருக்கும் எனது பெயரை நீக்கிவிடுங்கள், உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விடுகிறேன் என்று பிஷன்சிங் பேடி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் அரங்கின் ஒருபகுதிக்கு பிஷன் சிங் பேடியின் பெயரும், மொகிந்தர் அமர்நாத் பெயரும் வைக்கப்பட்டது. டெல்லி கிரிக்ெகட் சங்கம் சார்பில் பெரோஷா கோட்லா மைதானத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் 6 அடி சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 1999 முதல் 2013-ம் ஆண்டுவரை டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக ஜேட்லி இருந்தார், அவர் ஆற்றிய சேவைக்காக சிலை வைக்கப்பட உள்ளது.

ஆனால், அருண் ஜேட்லியின் சிலை வைக்க முடிவு செய்த டெல்லி கிரிக்கெட் அமைப்பின் செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஹோஹன் ேஜட்லிக்கும்(ஜேட்லியின் மகன்) பிஷன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் பிஷன்சிங் பேடி கூறுகையில் “ நான் மிகவும் பொறுமையாகவும், நிதானமாக இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால், நடக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் அதை மீறிவிடுவேன் என அச்சப்படுகிறேன். டெல்லி கிரிக்கெட் அமைப்பு உண்மையிலேயே என்னை சோதிக்க விரும்பி, என்னை இந்த முடிவு எடுக்கத் தள்ளுகிறது.

தயவு செய்து அரங்கில் எழுதப்பட்டிருக்கும் என்னுடைய பெயரை நீக்கிவிடுங்கள், நான் டெல்லி கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிவிடுகிறேன். தீவிர ஆலோசனைக்குப்பின்புதான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.

மரியாதை என்பது நாம் செய்யும் செயல்களிலும், பொறுப்புகளில் இருந்தும் கிடைக்கும் என்று நமக்குத் தெரியும். ஆனால் அருண் ஜேட்லி மறைவுக்குப்பின் அவசரஅவசரமாக அவரின் பெயர் அரங்கிற்கு சூட்டப்பட்டது.

என்னைப் பொறுத்தவரை ஜேட்லி சிறந்த நிர்வாகியாக இருக்கவில்லை. அவரின் நிர்வாகத்தில் பல்வேறு தோல்விகள் இருந்தன, அவரின் முடிவுகளையும் நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன். அருண் ஜேட்லி ஒரு அரசியல்தலைவர், அவரை நாடாளுமன்றம் நினைவுகூறலாம். ஆனால், விளையாட்டு அரங்கு அல்ல. தோல்விகள் எப்போதும் கொண்டாடப்படக்கூடாது, மறக்கப்பட வேண்டும்.

மற்ற நாடுகளில் எல்லாம் கிரிக்கெட் அரங்கிற்கு சாதனைப் படைத்த வீரர்களின் பெயர்கள்தான் வைக்கப்பட்டது. லாட்ஸ் மைதானத்தில் டபிள்யுஜி கிரேஸ், ஓவல் மைதானத்தில் சர் ஜேக் ஹோப்ஸ், சிட்னியில் சர்டொனால்ட் பிராட்மேன், பர்படாஸில் சர் கார்பீல்ட் சோபர்ஸ், மெல்போர்னில் ஷேன் வார்னின் பெயர் என வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

விளையாட்டுக்கு விளையாட்டுத் துறையில் சாதித்தவர்கள்தான் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் பெயர் காட்சிப்படுத்தும் பெயர்பட்டியலில் இருக்க வேண்டும். டெல்லி கிரிக்ெகட் அமைப்பு உலகளாவிய கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவில்லை. நான் வெளியேறுவது அவசியம் என நினைக்கிறேன். ஆதலால் என்னுடைய பெயரை அரங்கிலிருந்து அழித்துவிடுங்கள்
இவ்வாறு பிஷன்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிஷன்சிங் பேடி அளித்தபேட்டியில் கூறுகையில் “ நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை. நீங்கள் டெல்லி கிரிக்கெட் அமைப்பிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இனிமேல் என்னுடைய பெயர் இந்த அரங்கில் இருக்கநான் விரும்பவில்லை. நான் எப்போதும் சரியானது பக்கம்தான் நிற்பேன். ஆதலால், இப்போதுள்ள நிலையில் என்னுடைய பெயரை நீக்குவதுதான் சரி” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x