Published : 16 Oct 2015 03:30 PM
Last Updated : 16 Oct 2015 03:30 PM

தகவல்கள் 10- ரிவர்ஸ் ஸ்விங்கில் தெறிக்கவிட்ட ஜாகீர் கான்!

இந்தியாவின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரும், மிகச்சிறந்த ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளருமான ஜாகீர்கான் (37) சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* 2000-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஜாகீர்கான், அடுத்த 10 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

* தன் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சகட்டமாக இந்திய அணி 2011-ல் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார்.

* கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் ஜாகீர்கான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி.

* 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்லகெலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியே அவருடைய கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது.

* 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 14 டெஸ்ட், 9 ஒருநாள் போட்டி, 5 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஜாகீர்கான் விளையாடினார்.

* ஜாகீர்கான் இதுவரை 92 டெஸ்ட் போட்டி, 200 ஒருநாள் போட்டி, 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 311, ஒருநாள் போட்டியில் 282, டி20 போட்டியில் 17 என மொத்தம் 610 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

* டெஸ்ட் போட்டியில் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஜாகீர்கான், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் கபில்தேவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

* இந்திய வேகப்பந்து வீச்சுக்கு நீண்ட காலமாக தலைமை வகித்த ஜாகீர்கான் 2007-ல் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட தொடராக பார்க்கப்படுகிறது.

* 2011 உலகக் கோப்பை தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியுடன் பகிர்ந்து கொண்டார்.

* தன் ஓய்வு குறித்து 'புதிய தொடக்கம்' என தலைப்பிட்டு ஜாகீர் கான் எழுதியுள்ள அறிக்கையில், "2011-ல் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்ததை எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணமாகக் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். | வாசிக்க - >ஜாகீர் கானின் நெகிழ்ச்சியான அறிக்கையின் முழு வடிவம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x