

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெறுகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் இன்று பிற்பகல் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாகீர் கானின் ஓய்வு தொடர்பான தகவலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ராஜீவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வசப்படுத்தியவர் ஜாகீர் கான். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், 17 டிவென்டி 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.
2000-ல் டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் களம் கண்டவர். கடைசியாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.
கடந்த 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு, பந்துவீச்சுப் பிரிவில் ஜாகீர் கான் பெரும் பங்காற்றியது கவனிக்கத்தக்கது.