

மெல்போர்னில் வரும் 26-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்வாகும் வீரருக்கு, ஆஸ்திரேலியப் பழங்குடி ஜாம்பவான் ஜானி முல்லாக்கைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
கடந்த 1868-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள் சார்பில் ஒரு கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு, முதல் முறையாக இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட ஜானி முல்லாக் தலைமையில் அணி சென்றது.
வெளிநாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற முதல் ஆஸ்திரேலிய அணி என்பதால் அந்த அணியின் கேப்டன் முல்லாக்கைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
ஜானி முல்லாக்கின் 150-வது நினைவு தினம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வந்தபோது, ஆஸி. பூர்வீகக்குடியைச் சேர்ந்த டேன் கிறிஸ்டியன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு, இங்கிலாந்து பயணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல மகளிர் கிரிக்கெட் அணியில் அலிஷா கார்ட்னர் எனும் பழங்குடியின வீராங்கனை அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துப் பயணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் வரும் 26-ம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்வாகும் வீரருக்கு ஜானி முல்லாக்கைப் பெருமைப்படுத்தும் விதத்தில், பூர்வீகக் குடியின் சார்பில் அணியினர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆஸி. பூர்வீகக்குடி வீரர் டேன் கிறிஸ்டியன் கூறுகையில், “ஆஸி.யின் பூர்வீகக் குடி அணி வெளிநாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டு விளையாடியதை கவுரவிக்க வழங்கப்படும் விருது உண்மையில் சிறப்புமிக்கது. அவர்களை அங்கீகரிக்க இதைவிடச் சிறந்தது வேறு இல்லை. ஆஸி.யில் உள்ள பூர்வீகக் குடிகளுக்கு கிரிக்கெட் விளையாட அதிகமான வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களை அதிகமாக அணியில் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஜானி முல்லாக்கின் உண்மையான பெயர் உன்னாரிம்மின். கடந்த 1868-ம் ஆண்டு பழங்குடியின அணியில் இடம் பெற்று கேப்டனாக உயர்ந்தவர். வலதுகை பேட்ஸ்மேன், வலதுகை பந்துவீச்சாளராக இருந்த முல்லாக், 45 போட்டிகளில் விளையாடி 1,698 ரன்கள் சேர்த்தார்.1,877 ஓவர்கள் பந்துவீசி 257 விக்கெட்டுகளையும், 831 மெய்டன்களும் எடுத்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பிலும் பணியாற்றிய முல்லாக், 1866-ம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.