

உலகின் வேகமான மனிதர் யார் என்று கேட்டால், ‘உசேன் போல்ட்’ என்று விளையாட்டைப் பற்றித் தெரியாதவர்கள்கூட சொல்வார்கள். அந்த அளவுக்கு ஓட்டப் பந்தயத்தில் புகழ்பெற்ற வீரராக உசேன் போல்ட் விளங்குகிறார். ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், ஆண்டொன்றுக்கு ரூ.73 கோடியை வருமானமாக ஈட்டி வருகிறார்.
ஜமைக்காவில் உள்ள டிரெலவ்னி என்ற ஊரில் பிறந்தவர் உசேன் போல்ட். அவரது பெற்றோரான வெல்லஸ்லியும், ஜெனிபரும் உள்ளூரில் மளிகைக் கடை நடத்திவந்தனர். 12 வயது வரை ஓட்டத்தில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாதவராகத்தான் உசேன் போல்ட் இருந்துள்ளார். இந்தச் சூழலில்தான் உள்ளூரில் பெரிய ஓட்டப்பந்தய வீரரும் உசேன் போல்ட்டின் நண்பருமான ரிகார்டோ கேட்ஸ் என்பவர் அவரை ஓட்டப் பந்தயத்துக்கு அழைத்தார். போட்டியில் தோற்பவர், வெற்றி பெறுபவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குள் இருந்த பந்தயம். இந்த பந்தயத்தில் உசேன் போல்ட் பெற்ற வெற்றி, ஓட்டப் பந்தயத்தில் தன்னால் வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு உள்ளுரில் நடந்த அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் கலந்துகொண்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஒருபுறம் ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்று வந்த உசேன் போல்ட், மறுபுறம் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்தார். அதனால் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உசேன் போல்டுக்கு சிறு வயதில் இருந்தது. இந்நிலையில் அவரது தந்தைதான் ஓட்டத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார்.
“கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றால், மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் கிடைக்குமா என்று தெரியாது. அதற்கு சில சிபாரிசுகளும் தேவைப்படும். ஆனால் ஓட்டம் அப்படியல்ல. நீ ஜெயிக்க, ஜெயிக்க முன்னேறிக்கொண்டே இருக்கலாம்” என்று அவர் அறிவுரை கூறியிருக்கிறார். தந்தையின் அந்த அறிவுரைதான் இன்று உசேன் போல்ட்டை தடகள உலகின் சக்கரவர்த்தியாக ஆக்கியுள்ளது.