

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இன்னும் 2 நாட்களுக்கும் அதிகமாக மீதமிருக்க, வெறும் 90 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஆட்டமிழந்த அதே 21 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோ பர்ன்ஸும், மாத்யூ வேடும் 70 ரன்களை எட்டும் வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
வேட் 33 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த லபுஷானே 6 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், இந்த விக்கெட்டுகளால் ஆஸ்திரேலியாவுக்கு எந்த விதமான பின்னடைவும் ஏற்படவில்லை. 21 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சைக் கையாள முடியாமல் திணறிய இந்திய வீரர்கள் களமிறங்கிய வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதுவரை இந்திய அணி எடுத்திருப்பதில் மிகக் குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் இது என்பதால் இணையத்தில் இந்திய அணியின் பேட்டிங் சராமாரியாக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அணித் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் கடின உழைப்பு அத்தனையும் வெறும் 20 ஓவர்களில் மிக மோசமான பேட்டிங்கால் வீணாகிப் போனது என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் தேர்வு, பேட்டிங் ஆடிய விதம், கோலியின் தலைமை எனப் பல அம்சங்கள் குறித்துப் பிரபலங்கள், ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடுமையாகச் சாடிப் பதிவிட்டு வருகின்றனர்.