36 ரன்களில் முடிந்தது 2-வது இன்னிங்ஸ்: இந்திய அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர்

ஆட்டமிழந்து திரும்பும் கோலி.
ஆட்டமிழந்து திரும்பும் கோலி.
Updated on
1 min read

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமே 36 ரன்களை மட்டும் இழந்து இன்னிங்ஸை முடித்தது.

மூன்றாவது நாள் ஆட்டத்தை 1 விக்கெட் மற்றும் 62 ரன்கள் முன்னிலை என்கிற நிலையில் இந்தியா தொடர்ந்தது. மயங்க் அகர்வால் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா களத்தில் இருந்தனர். நாளின் முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார் மயங்க் அகர்வால். ஆனால், அடுத்த ஓவரிலிருந்து அடுக்கி வைத்த சீட்டுக்கட்டுகள் மளமளவென சரிவதைப் போல இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க ஆரம்பித்தனர்.

பேட் கம்மின்ஸ், ஜாஷ் ஹேஸல்வுட் என இருவரது பந்துவீச்சையும் எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். நாளின் முதல் விக்கெட்டாக பும்ரா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து புஜாரா (0), மயங்க் அகர்வால் (9), ரஹானே (0), கோலி (4) என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியின் எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை.

21 ஓவர்களில் வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருக்க களத்தில் ஆடிக்கொண்டிருந்த முகமது ஷமிக்கு வலது கையில் பந்து பட்டதால் காயம் ஏற்பட்டது. இதனால் மேற்கொண்டு ஆட முடியாமல் ஷமி பெவிலியன் திரும்பினர். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசுவதும் சந்தேகமே என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் 36 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸை இந்தியா முடித்தது. முன்னிலை மொத்தமே 89 ரன்கள். பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹேஸல்வுட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

90 ரன்கள் என்கிற வெற்றி இலக்கோடு ஆஸ்திரேலிய அணி தற்போது ஆடி வருகிறது. இந்தியாவின் மிகக் குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1974ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே இந்திய அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோராக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in