Last Updated : 18 Dec, 2020 12:55 PM

 

Published : 18 Dec 2020 12:55 PM
Last Updated : 18 Dec 2020 12:55 PM

ஆஸி.க்கு பூம்.. பூம்.. பும்ரா பதிலடி: 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. திணறல்: அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்

ஆஸியின் தொடக்க வீரர்களை வெளியேற்றிய இந்திய வீரர் பும்ரா : படம் உதவி ட்விட்டர்

அடிெலய்ட்


ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸி. பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மிரட்ட முடியுமா, நாங்களும் மிரட்டுவோம் என்ற ரீதியில் பும்ரா, ஷமி இருவரும் ஆஸி. அணியை முதல் செஷனில் மிரட்டிவிட்டனர்.

பந்துவீச்சில் தெறிக்கவிட்ட பும்ரா, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் இருவரையும் வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். 29 ஓவர்கள் முடிவில் ஆஸ்திேரலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்துள்ளது.

முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல்நாளான நேற்றை ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் 4 ஓவர்கள் மட்டுமே களத்தில் நின்ற இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதலாக 11 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தனர்.

அஸ்வின்(15) ரன்னிலும், சாஹா(9) இருவரும் நேற்றைய ஆட்டத்தை இன்று தொடங்கினர். இருவரும் கூடுதலாக எந்த ரன்னிலும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர். கம்மின்ஸ் வீசிய 2-வது ஓவரில் அஸ்வினும், ஸ்டார்க் ஓவரில் சாஹவும் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசிவரிசை பேட்ஸ்மேன்கள் முகமது ஷமி(0) உமேஷ் யாதவ்(6) இருவரையும் வெளியேற்றுவது ஸ்டார்க், கம்மின்ஸுக்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை.

93.1ஓவர்களில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் பும்ரா, ஷமி இருவரும் ஆஸி. பேட்ஸ்மேன்களை திணறவிட்டனர். பவுன்ஸர்கள், ஸ்விங் பந்துவீச்சு என பும்ரா, ஷமி பந்துவீச்சை அடிக்க பர்ன்ஸ், வேட் இருவரும் திணறினர்.

பும்ரா வீசிய 15-வது ஓவரில் மேத்யு வேட் 8 ரன்கள் சேர்த்து கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து வந்த லாபுஷேன், பர்ன்ஸுடன் நிதானமாக ஆடினார்.

பர்ன்ஸ் 8 ரன்கள் சேர்த்திருந்த போது பும்ரா வீசிய 17-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்தது. அடுத்து ஸ்மித் களமிறங்கி லாபுஷேனுடன் சேர்ந்தார். ஸ்மித் ரன் சேர்க்க தடுமாறிய நிலையில், லாபுஷேன் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார்.

லாபுஷேன் 16 ரன்கள் சேர்த்திருந்தபோது ஷமி வீசிய பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை பும்ரா தவறவிட்டதால் அது பவுண்டரியாக முடிந்தது. இல்லாவிட்டால் லாபுஷேன் விக்கெட்டும் வீழ்த்திருக்கும். பும்ரா வீசிய 23-வது ஓவரிலும் லாபுஷேன் அடித்த ஷாட்டை பிரித்வி ஷா கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அடுத்து அஸ்வின் 27-வதுஓவரை வீச வந்தார். அஸ்வின் பந்துவீச்சில் தொடக்கத்திலிருந்தே ஸ்மித் திணறினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் ஒரு ரன்னில் வெளியேறினார். அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார்.

லாபுஷேன் 28ரன்னிலும், ஹெட் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x