Published : 16 Oct 2015 02:32 PM
Last Updated : 16 Oct 2015 02:32 PM

தனித்துவமிக்க வீரர்: ஜாகீர் கானுக்கு பிரபலங்கள் புகழாரம்

ஜாகீர்கான் பேட்ஸ்மேன்களின் திட்டத்தை முறியடிக்கும் ஆற்றல் பெற்றவர்: சச்சின்

ஜாகீர்கானின் ஓய்வைத் தொடர்ந்து அவருடைய நெருங்கிய நண்பரான சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு தெரிந்த அமைதியான வேகப்பந்து வீச்சாளர்களில் ஜாகீர்கானும் ஒருவர். பெரும்பாலான நேரங்களில் பேட்ஸ்மேன்கள் என்ன மாதிரியான ஷாட்டை ஆடப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து அதை முறியடிக்கும் ஆற்றல் பெற்றவர். எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்ந்தவர். ஜாகீர்கான் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதிலும் அவர் சிறப்பாக செயல்படுவது உறுதி. எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஜாகீர்கான் என குறிப்பிட்டுள்ளார்.

சாதுர்யமான பவுலர்: தோனி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வாழ்த்துகள் ஜாகீர்கான். நாம் 2011-ல் உலகக் கோப்பையை வென்றோம். நீங்கள் இல்லாவிட்டால் அதை வெல்வது கடினமான காரியமாக இருந்திருக்கும். எனக்கு தெரிந்தவரையில் மிக சாதுர்யமான வேகப்பந்து வீச்சாளர் நீங்கள்தான். இப்போதும் இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, இர்பான் பதான், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் காந்த், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உள்ளிட்டோரும் ஜாகீர்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனித்துவமிக்க வீரர்: சஷாங்க் மனோகர்

பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ஜாகீர்கான் இந்திய கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிப்போடு விளை யாடியவர். இந்திய துணைக் கண்டத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருப்பது சவாலான தாகும். எனினும் இந்திய வேகப்பந்து வீச் சுக்கு தலைமை வகித்த அவர் தனித்துவ மிக்க வீரராக திகழ்ந்தார். இந்திய கிரிக் கெட்டுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங் களிப்பு செய்துள்ளார். அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

ரிவர்ஸ் ஸ்விங்கின் அடையாளம்: அனுராக் தாக்கூர்

பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜாகீர்கான் ஓய்வு பெறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய வேகப்பந்து வீச்சு துறையின் தலைவராகத் திகழ்ந்த அவர், இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சின் அடையாளமாக இருந்தார். களத்திலும், களத்துக்கு வெளியிலும் தலைசிறந்த ரோல் மாடலாக இருந்த ஜாகீர்கான், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர். அவருக்கு எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

தலைசிறந்த பந்துவீச்சு பயிற்சியாளர் என்பதை ஜாகீர் நிரூபிப்பார்: லட்சுமண்

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண் கூறியிருப்பதாவது:

போட்டியின் தன்மையை துல்லியமாக கணிக்கும் சமகால இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஜாகீர்கானும் ஒருவர். பந்துவீச்சில் அவருக்கு மிகப்பெரிய அறிவு இருப்பதோடு, மிகச்சிறந்த தகவல் பரிமாற்ற திறனும் உள்ளது. தான் ஒரு தலைசிறந்த பந்துவீச்சு பயிற்சியாளர் என்பதை ஜாகீர்கான் நிரூபிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x