Last Updated : 03 Oct, 2015 07:56 AM

 

Published : 03 Oct 2015 07:56 AM
Last Updated : 03 Oct 2015 07:56 AM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்குகிறது- முதல் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா மோதல்

8 அணிகள் பங்கேற்கும் 2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கண்கவர் நடனங்களுடன் இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி எப்.சி., கேரளா பிளாஸ்டர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இரு சுற்று ஆட்டங்களாக நடைபெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறிய சென்னையின் எப்.சி. அணியும், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன. சொந்த மண்ணில் விளையாடுவது சென்னையின் எப்.சி. அணிக்கு கூடுதல் பலமாகும். அதனால் இந்தப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியோடு தொடங்குவதில் தீவிரமாக உள்ளது சென்னையின் எப்.சி. அணி.

மிரட்டும் இலானோ

சென்னை அணி கடந்த சீசனில் விளையாடிய பெரும்பாலான வீரர்களை தக்கவைத்துக் கொண்டதோடு, அணியை மேலும் வலுவாக்கும் வகையில் பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில முன்னணி வீரர்களை அணியில் சேர்த்திருக்கிறது. கடந்த முறை சென்னை அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த மிட்பீல்டர் இலானோ 9 கோல்களை அடித்து தங்கப் பந்து விருதை தட்டிச் சென்றார். இந்த சீசனிலும் அவருடைய அசத்தல் ஆட்டம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த முறை சென்னையின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த மென்டோஸா, மென்டி, பல்வந்த் சிங் உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை தலைகீழாக பல்டியத்து (சிசர் கட்) கோலடித்த மென்டி, அசுர வேகத்தில் அபாரமாக செயல்பட்ட மென்டோஸா, கோல் மழை பொழிந்த இலானோ ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க சென்னை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கடும் போட்டி

கடந்த முறை விளையாடிய மைக்கேல் சில்வர்ஸ்டார், எரிக் ஜெம்பா ஆகியோருக்குப் பதிலாக இத்தாலி மிட்பீல்டர் மானுவேல் பிளாசி, பின்கள வீரர் அலிசாண்ட்ரோ போடென்ஸா ஆகியோரை சேர்த்துள்ள சென்னை அணி, பிரேசிலைச் சேர்ந்த மிட்பீல்டர் ரபேல் அகஸ்டோ, பின்கள வீரர் இடெர் மான்டீரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ் ஆகியோரையும் வாங்கியிருக்கிறது.

கடந்த முறை கொல்கத்தா அணிக்காக ஆடிய எத்தியோப்பிய ஸ்டிரைக்கர் பிக்ரு, கேமரூன் கோல் கீப்பர் அபூலா எடிமா ஆகியோர் இந்த முறை சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர். சென்னையின் அணியின் பயிற்சியாளரும், வீரருமான மெட்டாரஸி, “எங்கள் அணியில் ஒவ் வொரு இடத்துக்கும் இரு வீரர்களிடையே போட்டி இருக்கும். அதனால் எங்கள் அணி வலுவானதாகவும், சமபலம் கொண்டதாகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் கணேஷ்

சென்னையின் எப்.சி. அணியில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழக வீரர் தனபால் கணேஷ்தான். அதனால் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருப்பதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

அணி மாறிய வீரர்கள்

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி, ஜப்பானில் பிறந்த இந்திய மிட்பீல்டர் அரட்டா ஸூமி, பின்கள வீரர் ரினோ ஆண்டோ ஆகியோருடன் ஒப்பந்தம் செய்திருப்பதோடு, உள்ளூர் வீரர்களான லால்சாவ்ன்கிமா, அகஸ்டின் பெர்னாண்டஸ், அம்ரிந்தர் சிங், குன்ஸாங் பூட்டியா ஆகியோரையும் அணியில் சேர்த்துள்ளது.

கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த பிக்ரு, லூயிஸ் கிரேஸியா, ஜோப்ரே மத்தேயூ ஆகியோர் வேறு அணிக்கு மாறியது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. எனினும் நடப்பு சாம்பியன் என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

கலக்குவாரா போஸ்டிகா

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த வீரரான போர்ச்சுகலின் ஹெல்டர் போஸ்டிகா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் கேரள அணிக்காக விளையாடிய கனடாவின் இயான் ஹியூம், இந்த முறை கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு பலம் சேர்க்கிறது.

கடந்த சீசனில் கேரள அணி இறுதிச்சுற்று வரை முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த இயான் ஹியூம், இந்த முறை பிக்ரு இல்லாத குறையை போக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர போர்ஜா பெர்னாண்டஸ், கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்ப்பார் என நம்பலாம்.

சென்னை:

கோல் கீப்பர்கள்: அபூலா இடெல் பீட், கரன்ஜித் சிங், நிதின் லால். பின்களம்: இடெர் மான்டீரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ், பெர்னாட் மென்டி, அலிசாண்ட்ரோ போடென்ஸா, தனசந்திர சிங், அபிஷேக் தாஸ், லால்மாய்சங்கா ரால்டே, ஜஸ்டின் ஸ்டீபன், மெஹ்ராஜுதீன் வாடூ. நடுகளம்: இலானோ புளூமர், மானுவேல் பிளாசி, ரஃபேல் அகஸ்டோ, புரூனோ பெலிசாரி, தோய் சிங், ஹர்மான்ஜோத் கப்ரா, தனபால் கணேஷ், குட்வின் பிரான்கோ, ஜாகீர் முந்தம்பாரா. முன்களம்: ஜான் ஸ்டீவன் மென்டோஸா, ஜேஜே லால்பெக்குலா, ஜெயேஷ் ரானே, பல்வந்த் சிங்.

கொல்கத்தா:

கோல் கீப்பர்கள் அம்ரிந்தர் சிங், ஜுவான் ஜீசஸ், குன்ஸாங் பூட்டியா. பின்களம்: அர்னாப் மான்டல், அகஸ்டின் மெல்வின், டென்ஸில் பிராங்கோ, ஜோஸ் லூயிஸ், ஜோஸ் மிக்கேல், லால்சாவ்ன்கிமா, மோகன்ராஜ், ரினோ ஆண்டோ, சயீத் ரஹிம் நபி. நடுகளம்: அரட்டா ஸூமி, போர்ஜா பெர்னாண்டஸ், கிளிப்போர்டு மிரான்டா, ஜேமி மார்ட்டினிஸ், ஜேவியர் லாரா, நடாங் பூட்டியா, அபென்ட்ஸே நேட்டோ, சமீ, ஷேக் ராஜா, வால்மிரோ லோபஸ். முன்களம்: பல்ஜித் சாஹ்னி, ஹெல்டர் போஸ்டிகா, இயான் ஹியூம், சுஷீல் குமார்.

தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான்

ஐஎஸ்எல் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அலியா பட் உள்ளிட்டோர் நடனமாடுகின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சன், சென்னையின் எப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். கடந்த முறை சென்னையின் எப்.சி. அணி விளையாடிய பல்வேறு போட்டிகளுக்கு நேரில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஐஸ்வர்யா ராய், இந்த முறை தொடக்க விழாவில் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறார்.

ஐ.எஸ்.எல். தலைவர் நீதா அம்பானி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கேரள அணி யின் உரிமையாளரான சச்சின் டெண்டுல்கர், அட்லெடிகொ அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரவ் கங்குலி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. தொடக்க விழாவுக்கான 35 ஆயிரம் டிக்கெட்டு களும் விற்றுத்தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயா மேக்ஸில் தமிழில் வர்ணனை

இந்த முறை ஐஎஸ்எல் போட்டி பிராந்திய மொழி வர்ணனைகளுடன் ஒளிபரப்பப்படுகிறது. இதில் தமிழ் வர்ணனையும் இடம்பெறுகிறது. ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையுடன் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சென்னை கால்பந்து வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்களான சி.எம்.ரஞ்சித், எஸ்.விஜயகார்த்தி கேயன் ஆகியோர் தமிழ் வர்ணனை யாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள னர். ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வரும் ரஞ்சித், தமிழக அணிக்காக சந்தோஷ் டிராபி போட்டிகளிலும், இந்திய ஜூனியர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 2014 சீசன் சந்தோஷ் டிராபி போட்டியில் தமிழக அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது தமிழக அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கியில் பணி யாற்றி வரும் விஜய கார்த்திகேயன், தமிழக அணியின் முன்னாள் கோல் கீப்பர் ஆவார். சந்தோஷ் டிராபி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடியுள்ள இவர், தற்போது ரிசர்வ் வங்கி கால்பந்து அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சிகளில் கால்பந்து தொடர்பான விவாதங்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

இவர்கள் இருவரும் தமிழகத் தைச் சேர்ந்த பிரபல வர்ணனை யாளர் நானி உள்ளிட்டோருடன் இணைந்து மும்பையில் இருந்து வர்ணனை செய்யவுள்ளனர். இவர்களுக்கு மும்பையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x