

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று (டிசம்பர் 17) தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி ஆடும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.
பொதுவாக டெஸ்ட் போட்டிகள் காலையில் தொடங்கி மாலையில் சூரிய வெளிச்சம் மங்குவதற்குள் முடிந்துவிடும். இப்போட்டிகளில் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். அதற்கு நேரெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் மதிய நேரத்தில் தொடங்கி இரவில் முடியும். இதில் சிவப்பு நிற பந்துகளுக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும்.
இளஞ்சிவப்பு நிறப் பந்துகள், சிவப்பு நிற பந்துகளைவிட அதிக கடினமாக இருப்பதுடன், அதிக அளவில் ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அதே நேரத்தில் இவை அத்தனை எளிதில் கடினத் தன்மையை இழக்காது என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பது கடினம். மேலும் பேட்ஸ்மேன்களுக்கும் பந்து வருவதை கணிப்பது கடினமாக இருக்கும்.
இப்படி சில சிக்கல்கள் இருப்பதால்தான் இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் தவிர்த்து வந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பே பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆரம்பித்தாலும், இந்திய அணி இதைச் சற்று தள்ளியே வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக வைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்தது.
இப்போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ், 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி தந்த நம்பிக்கையால், இந்தியா இன்று ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.