

காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்நேற்று முக்கியமான வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தனது சக அணி வீரர்களுடன் 10 நிமிடங்கள் உடற் பயிற்சி மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்துக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. பந்தை கீழே குனிந்து எடுக்கும் போது அசவுகரியமாக உணர்ந்த ஸ்மித், வழக்கமான கால்பந்து பயிற்சியை தவிர்த்துவிட்டு ஓய்வறைக்கு சென்றார்.
ஓய்வறைக்கு செல்லும் போதுஸ்மித்துடன் அணியின் பிசியோதெரபிஸ்ட் டேவிட் பீக்லியும் இருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற முக்கியமான வலை பயிற்சியிலும் ஸ்மித் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஸ்மித், முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கெனவே டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், பயிற்சி ஆட்டத்தின் போது மூளையதிர்ச்சி ஏற்பட்டதால் வில் புகோவ்ஸ்கியும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோட்டும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
மேலும் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன், பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா அடித்த ஷாட்டால் தலைப்பகுதியில் காயம் அடைந்தார். இவர்கள் 4 பேரும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது ஸ்மித்தும் காயம் அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது