Last Updated : 14 Dec, 2020 01:42 PM

 

Published : 14 Dec 2020 01:42 PM
Last Updated : 14 Dec 2020 01:42 PM

அவமானமாக இருந்தது; இதற்கு முன் இப்படி விளையாடிப் பார்த்ததில்லை: ஆஸி. ஏ அணியை வறுத்தெடுத்த ஆலன் பார்டர்

ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் : கோப்புப் படம்.

சிட்னி

இந்திய ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய ஏ அணி பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடியதைப் பார்க்கவே அவமானமாக இருந்தது. இதற்கு முன் இதுபோல் விளையாடி நான் பார்த்தது இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் சாடியுள்ளார்.

இந்திய -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவாக, பிங்க் பந்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ, ஆஸி ஏ அணிகள் மோதின. இந்த ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 194 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய ஏ அணி 108 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 86 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய ஏ அணி ரிஷப் பந்த் (103) சதத்தாலும், ஹனுமா விஹாரி (104) சதத்தாலும் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 473 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்றைய 3-ம் நாள் மற்றும் இறுதி நாளில் ஆஸ்திரேலிய ஏ அணி தொடக்கத்தில் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், 4-வது விக்கெட், 5-வது விக்கெட்டுகள் இந்திய வீரர்களைப் பாடாய்ப்படுத்தின.

3-ம் நாள் ஆட்டத்தின் நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஆஸி ஏ அணி 304 ரன்கள் சேர்த்ததையடுத்து ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

5-வது விக்கெட்டுக்குக் கூட்டணி சேர்ந்த மெக்டர்மட், வில்டர்முத் கூட்டணியைப் பிரிக்க முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் தவித்தனர். முதல் 3 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த நிலையில் இருவரும் சேர்ந்து இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குத் தண்ணி காட்டிவிட்டனர்.

5-வது விக்கெட்டுக்கு இருவரும் 165 ரன்கள் சேர்த்தனர். வில்டர்முத் 111 ரன்களிலும், மெக்டர்மட் 107 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி விளையாடியதை முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலிய ஏ அணியில் இருக்கும் பல வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுகிறார்கள். ஆனால், அவர்களின் பேட்டிங், பந்துவீச்சைப் பார்த்தபோது முழு அவமானமாக இருந்தது என பார்டர் தெரிவித்துள்ளார்.

அதிலும் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி கூட்டணி களத்தில் இருந்து ஆஸ்திரேலியப் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். கடைசி செஷனில் மட்டும் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 170 ரன்கள் சேர்த்தது.

அதுமட்டுமல்லால் கடைசி ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசி, ரிஷப் பந்த் சதத்தை நிறைவு செய்தார். இதைக் குறிப்பிட்டும், ஆஸ்திரேலிய அணியின் மோசமான பந்துவீச்சையும் பார்டர் விமர்சித்துள்ளார்.

ஃபாக்ஸ் கிரிக்கெட் சேனலுக்கு ஆலன் பார்டர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணி மிக மிக பொறுப்பற்ற தனத்தில் விளையாடியது. அதிலும் கடைசி செஷனைப் பார்த்து நான் வேதனையடைந்தேன். இதுபோன்ற பொறுப்பற்ற பந்துவீச்சைப் பார்த்தது இல்லை.

ஆஸ்திரேலிய ஏ அணியில் இருக்கும் பல வீரர்கள் ஆஸி.அணிக்காக விளையாடுகிறார்கள். இளம் வீரர்கள் அணியை வெற்றி பெற வழியைத் தேடியிருக்கலாம். பந்துவீச்சு, ஃபீல்டிங், கேப்டன் செயல்பாடு அனைத்துமே அவமானப்படும் விதத்தில் இருந்தது. இதற்கு முன் இப்படி ஒரு மோசமான, பொறுப்பற்ற ஆட்டத்தை நான் பார்த்தது இல்லை.

என்னுடைய விமர்சனத்தில் எந்த வீரருக்காவது அதிருப்தி இருந்தால் என்னைத் தொடர்புகொண்டு கேள்வி கேட்கலாம். அவ்வாறு எந்த வீரராவது கேள்வி எழுப்பினால், பேசினால், நான் மகிழ்ச்சியடைவேன். பயிற்சி ஆட்டத்தின் இறுதி நாளில் நடந்தது, விக்கெட்கள் நிலைத்து நின்றது அனைத்துமே சாதாரணமாகத்தான் இருந்தது. எதிரணிக்குப் போட்டியை அளிக்கும் விதத்தில் இல்லை.

நிச்சயமாக இந்திய ஏ அணியை வென்றிருக்க உங்களால் முடியும். ஆனால், மோசமான செயல்பாட்டாலும், பொறுப்பற்ற ஆட்டத்தாலும் ஆட்டம் டிரா ஆனது. இதேபோக்கில் நீங்கள் விளையாடினால் அடுத்துவரும் இந்தியாவுடனான தொடர் கடினமாக இருக்கும். அனைத்துக்கும் உங்கள் மனநிலைதான் காரணம். நான் அனைவரையும் குறை கூறவில்லை. பொதுவாகத்தான் தெரிவிக்கிறேன்''.

இவ்வாறு பார்டர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x