தரவரிசையில் முதல் முறையாக முதலிடம்; டெஸ்ட் தொடரை வென்றது நியூஸி; 2-வது போட்டியிலும் நியூஸிக்கு இன்னிங்ஸ் வெற்றி: மே.இ.தீவுகள் தோல்வி

டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் கோப்பையுடன் நியூஸிலாந்து அணியினர்: படம் உதவி |  ட்விட்டர்.
டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் கோப்பையுடன் நியூஸிலாந்து அணியினர்: படம் உதவி | ட்விட்டர்.
Updated on
2 min read

ஹென்ரிக்ஸின் அபாரமான சதம், நீல்வாக்னர், டிம் சவுதி ஆகியோரின் திணறவைக்கும் பந்துவீச்சு ஆகியவற்றால் வெலிங்டனில் நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக நியூஸிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 24 போட்டிகளில் 116 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் முதலிடத்தில் உள்ளன.

ஆட்டநாயகன் விருது வென்ற ஹென்றி நிகோலஸ்.
ஆட்டநாயகன் விருது வென்ற ஹென்றி நிகோலஸ்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைப் பொறுத்தவரை மே.இ.தீவுகள் அணியை 2 போட்டிகளிலும் வென்றதன் மூலம் 120 புள்ளிகளைப் பெற்ற நியூஸிலாந்து 300 புள்ளிகளுடன் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

இதனால் அடுத்து இந்தியா, ஆஸி. அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடரில் வெல்பவர்கள் ஐசிசி சாம்பியன்ஷிப் வரிசையில் முக்கிய இடத்தை நோக்கி நகர்வார்கள்.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்களும், மே.இ.தீவுகள் அணி 131 ரன்களும் சேர்த்தன. 330 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய மே.இ.தீவுகள் அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இன்னிங்ஸ் 12 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது ஹென்ரிக்ஸ் நிகோலஸுக்கும், தொடர் நாயகன் விருது ஜேமிஸனுக்கும் வழங்கப்பட்டது.

மே.இ.தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்திருந்தது. ஹோல்டர் 60 ரன்களிலும், ஜோஷ்வா டா சில்வா 25 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர் நாயகன் விருது வென்ற நியூஸி ஜேமிஸன்.
தொடர் நாயகன் விருது வென்ற நியூஸி ஜேமிஸன்.

இருவரும் இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹோல்டரை 61 ரன்களில் கிளீன் போல்டாக்கி சவுதி வெளியேற்றினார். இருவரும் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த அல்சாரி ஜோஸப், டி சில்வாவுடன் சேர்ந்தார். நிதானமாக பேட் செய்த சில்வா அரை சதம் அடித்தார். அல்சாரி ஜோஸப் 24 ரன்கள் சேர்த்த நிலையில் சவுதி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 57 ரன்கள் சேர்த்த டா சில்வா வாக்னர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கேப்ரியல் டக் அவுட்டில் வாக்னரிடம் விக்கெட்டை இழந்தார்.

79.1 ஓவர்களில் 337 ரன்களுக்கு மே.இ.தீவுகள் அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. நியூஸிலாந்து தரப்பில் போல்ட், வாக்னர் தலா 3 விக்கெட்டுகளையும், சவுதி, ஜேமிஸன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in