

13 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறு கிறது. சிங்கப்பூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் போட்டியை வங்கதேசத்தில் வைத்து நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. இதை மற்ற நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
பிப்ரவரி 24 ந்தேதி முதல் மார்ச் 6 ந்தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி இந்தியாவில் டி20 உலககோப்பை போட்டி தொடங்குகிறது. இதற்கு ஆசிய அணிகள் தயாராகும் வித மாக இம்முறை ஆசியகோப் பையை டி 20 தொடராக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆசிய கோப்பை 50 ஓவர் கொண்ட ஒரு நாள் போட்டியாகவே நடத்தப்பட்டு வந்தது.
ஆசிய கோப்பை டி 20 தொடரில் மொத்தம் 5 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய 4 நாடுகள் நேரடி யாக தகுதி பெறும். ஆப்கானிஸ்தான், ஓமன், ஹாங் காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு அணி தகுதி சுற்று மூலம் ஆசிய கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை பெறும். இந்த தகுதி சுற்று போட்டிகள் நவம்பர் மாதம் நடக்கிறது.
வங்கதேசத்தில் 5 வது முறையாக ஆசிய கோப்பை போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளன.