Last Updated : 13 Dec, 2020 11:30 AM

 

Published : 13 Dec 2020 11:30 AM
Last Updated : 13 Dec 2020 11:30 AM

இந்திய அணிக்குச் சிக்கல்; வருகிறார் மிட்ஷெல் ஸ்டார்க்: ஆஸி.அணியில் நாளை இணைகிறார்

ஆஸி. வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் : கோப்புப்படம்

அடிலெய்ட்

குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஓய்வில் சென்ற ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியில் நாளை மீண்டும் இணைகிறார்.

இதையடுத்து, வரும் 17-ம் தேதி அடிலெய்டில் இந்திய அணிக்கு எதிராகத் தொடங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்டார்க்கின் வருகை ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை மேலும் வலிமைப்படுத்தும்.

அதேசமயம், இந்திய அணிக்கு ஸ்டார்க் வருகை பெரும் சிக்கலையும், தொந்தரவையும் ஏற்படுத்தும். ஒருநாள், டி20 போட்டிகளில் ஸ்டார்க் பந்துவீசுவதற்கும், டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவதற்கும் அதிலும் குறிப்பாக பிங்க் நிறப் பந்தில் இவரின் பந்துவீச்சும், பவுன்ஸரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் சிக்கலாகவே மாறக்கூடும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாத சூழலில் இருப்பதாகக் கூறி ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டார்க் ஓய்வில் சென்றார். தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், மீண்டும் அணியில் இணையத் தயாராக இருப்பதாக ஆஸி. அணி நிர்வாகத்திடம் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திேரலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விடுத்த அறிவிப்பில், “குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ஓய்வில் சென்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஓய்வு முடிந்து மீண்டும் அணிக்குள் திங்கள்கிழமை திரும்புகிறார்.

சிட்னியில் விளையாடிவரும் ஆஸி. ஏ அணியோடு ஸ்டார்க் இணைவார். ஆஸி. அணிக்குள் திரும்ப வரும் ஸ்டார்க்கை வரவேற்க நிர்வாகமும், வீரர்களும் தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸி. அணியின் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி நீக்கப்பட்டுள்ளார். கடந்த பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து புகோவ்ஸ்கி ஹெல்மெட்டில் பட்டுக் காயம் ஏற்பட்டது. இதனால் கன்கஸனில் புகோவ்ஸ்கி வெளியேறினார்.

அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால், அவருக்குப் பதிலாக முதல் டெஸ்ட்டில் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இடம் பெற்றபின் டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படாமல் இருந்த மார்கஸ் ஹாரிஸ் மீண்டும் ஆஸி. அணிக்குள் வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x