ரோஹித் சர்மா உடற்தகுதி பரிசோதனையில் தேறினார்: டெஸ்ட் தொடருக்காக வரும் 14-ல் ஆஸி. புறப்படுகிறார்

ரோஹித் சர்மா : கோப்புப்படம்
ரோஹித் சர்மா : கோப்புப்படம்
Updated on
2 min read

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோஹித் சர்மா உடற்தகுதிப் பரிசோதனையில் தேறிவிட்டார் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆஸி.யில் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்காக ரோஹித் சர்மா விரைவில் புறப்படுவார் எனத் தெரிகிறது.

ஐபிஎல் தொடரின்போது ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில், கடைசி நேரத்தில் சில போட்டிகளில் விளையாடாமல் ரோஹித் சர்மா இருந்தார்.

அதன்பின் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை ஆய்வு செய்த இந்திய அணியின் மருத்துவக் குழுவினர், அவருக்கு ஓய்வு தேவை என்று பிசிசிஐ தேர்வுக் குழுவிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆஸி.க்கு எதிரான ஒருநாள், மற்றும் டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், டெஸ்ட் தொடருக்குள் ரோஹித் சர்மாவின் உடல்நிலை குணமடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் அவரை டெஸ்ட் அணிக்கு மட்டும் தேர்வு செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், விராட் கோலி, தனது மனைவியின் பிரசவத்துக்காக நாடு திரும்புகிறார். இதனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடமாட்டார். இதை ஈடுகட்டும் வகையில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, உடற்தகுதி மற்றும் பயிற்சிக்காக கடந்த மாதம் 19-ம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரோஹித் சர்மா வந்தார். அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உடற்தகுதிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தப் பரிசோதனையில் ரோஹித் சர்மா தேறிவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

“ரோஹித் சர்மா கடந்த 20 நாட்களாக எடுத்த தீவிரப் பயிற்சி, பரிசோதனையில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றுவிட்டார். அடுத்த போட்டிகளுக்கும் அவர் தயாராக இருக்கிறார்.

அவரின் உடல்நிலை குறித்த அறிக்கையை பிசிசிஐக்கும், தேர்வுக் குழுவுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். எப்போது ரோஹித் சர்மாவை ஆஸி.க்கு அனுப்பி வைக்கலாம் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்” என்று தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸி.க்குச் செல்லும் ரோஹித் சர்மா 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், முதல் 2 டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை. 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்துதான் ரோஹித் சர்மா பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in