Last Updated : 11 Dec, 2020 07:29 AM

 

Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

விளையாட்டாய் சில கதைகள்: தொலைக்காட்சி நிலையத்தை வியக்கவைத்த ஆனந்த்

இந்தியாவில் மையம் கொண்டு உலகம் முழுவதும் சுழன்றடித்த செஸ் புயலான விஸ்வநாதன் ஆனந்த்தின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11). 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இதற்காக பல்வேறு விருதுகளை இந்திய அரசு அவருக்கு வழங்கியுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்த், இத்தனை பட்டங்களையும், விருதுகளையும் வெல்வதற்கு அடித்தளமிட்டவர் அவரது தாய் சுசீலா. 6 வயதிலேயே ஆனந்த்துக்கு செஸ் விளையாட்டின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தும், ஓய்வு நேரங்களில் அவருடன் செஸ் விளையாடியும் தன் மகனின் ஆற்றலை வளர்த்தார். பொழுதுபோக்குக் காக செஸ் ஆடுவதைவிட, ஒரு சாம்பியனாக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆனந்த் செஸ் ஆட்டங்களில் ஆடுவதை உணர்ந்துகொண்ட அவர், அது தொடர்பான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தும், செஸ் கிளப்புகளில் ஆடவைத்தும் உற்சாகப்படுத்தினார். ஆனந்தின் தந்தை விஸ்வநாதன், தென்னக ரயில்வேயில் தலைமை மெக்கானிக்கல் இன்ஜினீயராக இருந்தார். 1978-ம் ஆண்டு அவர் பணி நிமித்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்த காலகட்டத்தில், மணிலா தொலைக்காட்சியில் செஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில், செஸ் ஆட்டம் தொடர்பான புதிர் கேள்வி ஒன்றைக் கேட்பார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு செஸ் தொடர்பான புத்தகங்களை பரிசளிப்பார்கள். ஒவ்வொரு நாளும் அந்தப் புதிர்களை விடுவித்து பரிசுகளை வென்று வந்துள்ளார் ஆனந்த்.

ஒரே நபராக ஆனந்த் தொடர்ந்து பரிசுகளை வென்றுவர, ஒரு நாள் அவரை தொலைக் காட்சி நிலையத்துக்கு அழைத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், “இங்குள்ள புத்தக பரிசுகளை எல்லாம் எப்படியும் நீதான் வெல்லப் போகிறாய். அதனால் இன்றைக்கு நீயே உனக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்”என்று கூறிவிட்டார்களாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x