ஐசிசி ஒருநாள் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் தொடர்ந்து நீடிக்கும் கேப்டன் கோலி: பும்ரா முன்னேற்றம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : படம் உதவி |ட்விட்டர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : படம் உதவி |ட்விட்டர்.
Updated on
2 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் விராட் கோலி (89, 63) கேன்பெரா, சிட்னியில் நடந்த ஆட்டங்களில் அரை சதங்கள் அடித்தார். இதையடுத்து, 870 புள்ளிகளுடன் கோலி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இடம் பெறாத துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 842 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். ரோஹித் சர்மாவைவிட 5 புள்ளிகள் குறைவாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் 3-வது இடத்தில் உள்ளார்.

2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் ஒருநாள் தொடரில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியா, ஆஸி.க்கு எதிராக முதல் ஒருநாள் ஆட்டத்தில் 90 ரன்களும், 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 92 ரன்களும் சேர்த்தார். இதன் மூலம் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்ததாக 553 புள்ளிகளுடன் 50 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 49-வது இடத்தை ஹர்திக் பாண்டியா பிடித்துள்ளார்.

ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் 3 ஒருநாள் போட்டிகளிலும் முறையே 114, 60, 75 ரன்கள் சேர்த்ததையடுத்து, 791 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூனில் அதிகபட்சமாக 4-வது இடத்தை பின்ச் பிடித்திருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்து மிரட்டிய ஸ்டீவ் ஸ்மித், கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் டாப் 20 வீரர்கள் பட்டியலுக்குள் திரும்பவும் வந்து 15-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேக்ஸ்வெல் இந்தத் தொடரில் இரு அரை சதங்கள் அடித்ததையடுத்து, மீண்டும் டாப் 20 பேட்ஸ்மேன்கள் பட்டியலுக்குள் வந்து 20-ம் இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பின் தற்போதுதான் மேக்ஸ்வெல் டாப் 20 இடத்துக்குள் நுழைந்துள்ளார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 700 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூஸி வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜிப் உர் ரஹ்மான் 701 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸி.யின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்ப்பா முதல் முறையாக டாப் 20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து, 14-வது இடத்துக்கு ஸம்ப்பா நகர்ந்துள்ளார். ஹேசல்வுட் 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in