

கபில்தேவின் காலத்துக்குப் பிறகு அமைதியான தென்றலாய் இருந்த இந்திய கிரிக்கெட் அணியை ஆக்ரோஷமான புயலாய் மாற்றியவர் சவுரவ் கங்குலி. அவர் கேப்டனாவதற்கு முன் மற்ற அணி வீரர்கள்தான் இந்திய வீரர்களை கிண்டலடித்து பேட்டிங் செய்யும்போது உசுப்பேற்றுவார்கள் (ஸ்லெட்ஜிங்). இதன்மூலம் அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்யும்போது நமது வீரர்கள் அமைதியாய் இருப்பார்கள். ஆனால் கங்குலி கேப்டனாக வந்த பிறகு நிலைமை தலைகீழானது. ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்ற கொள்கையைக் கொண்ட கங்குலி, எதிரணிகளின் வழியிலேயே சென்று அவர்களை உசுப்பேற்றி ஆட்டமிழக்கச் செய்தார். அதனால் இந்திய அணி அதிக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது.
கேப்டனாக மட்டுமின்றி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தாலும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக உருவெடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததுடன் 100-க்கும் அதிகமான விக்கெட்களையும் கங்குலி வீழ்த்தியுள்ளார்.கங்குலியைத் தவிர காலிஸ், சச்சின், ஜெயசூர்யா, தில்ஷன் ஆகிய 4 வீரர்களே இச்சாதனையை செய்துள்ளனர்.
சிறுவயதில் கங்குலிக்கு கிரிக்கெட் பிடிக்காது. இருந்தாலும் தந்தை மற்றும் அண்ணனின் வற்புறுத்தலாலும், கிரிக்கெட் முகாமுக்கு செல்லும் நேரத்தில் படிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதாலும் 10-ம் வகுப்புக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். கங்குலி வலதுகை பழக்கம் உடையவர். ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் இடது கையைப் பயன்படுத்துவார். இதற்கு காரணம் அவரது அண்ணன் ஸ்னேஹசீஷ். வங்கதேச மாநில அணியின் கிரிக்கெட் வீரராக இருந்த அவர், இடதுகை பேட்ஸ்மேன். அவரைப் பார்த்து கிரிக்கெட் ஆடக் கற்றுக் கொண்டதால் கங்குலியும் இடதுகை பேட்ஸ்மேனாக மாறினார்.