

இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்த்திவ் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். எனது 18 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தை இன்று திரையிட்டு மூடுகிறேன். கனத்த மனத்துடன் எனது நன்றியைப் பலருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
17 வயதில் கிரிக்கெட்டில் நுழைந்த சிறுவனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து நம்பிக்கைகளையும் கொடுத்தது. எனது கைகளைப் பிடித்து வழி நடத்திய அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியில் தனக்குத் துணையாக நின்று வழிநடத்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பார்த்திவ் படேல் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பார்த்திவ் படேல் வீக்கட் கீப்பர், பேட்ஸ்மேனாகத் தனது 17-வது வயதில் 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பார்த்திவ் படேல் 900 ரன்களுக்குக்கு மேல் எடுத்துள்ளார். 38 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 700 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காக பார்த்திவ் படேல் விளையாடியுள்ளார்.