

ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை இழந்திருந்தாலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்காக மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்க்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன் என்றால் மிகையல்ல. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற நடராஜன், 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அனுபவமான பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாகத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய நிலையில், வேகப்பந்துவீசச்சுக்கு சன்ரைசர்ஸ் அணியில் வலு சேர்த்தவர் நடராஜன்.
தொடர்ந்து ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில், வலைப் பயிற்சியில் பந்து வீசுவதற்காக நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி20 அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுகமாகவிருந்தார். ஆனால், அவர் காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியவில்லை. அவருக்குப் பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டார்.
முன்னதாக ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜன் விளையாடினார். இதன் மூலம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி, டி20 போட்டி என அடுத்தடுத்து நடராஜனுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நடராஜன் அணியில் அனைவரது அபிமானத்தையும் வென்றிருக்கிறார். அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த டி20 தொடரில் நடராஜன் மிகக் குறைவான ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். தொடர் நாயகனான ஹர்திக் பாண்டியாவே, தனது தொடர் நாயகன் தேர்வு நடராஜன்தான் என்று வாழ்த்தியுள்ளார்.
தற்போது நடராஜனுடன் சன்ரைஸர்ஸ் அணியில் விளையாடிய அணியின் கேப்டனான டேவிட் வார்னரும் நடராஜனைப் புகழ்ந்துள்ளார்.
"தோல்வியோ, வெற்றியோ நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும், களத்தைத் தாண்டியும் மதிக்கிறோம். நாங்கள் தொடரை இழந்துவிட்டாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு இனிமையானவர். ஆட்டத்தை மிகவும் நேசிப்பவர். வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக அணிக்கு வந்து, முதன் முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது என்ன ஒரு சாதனை நண்பா. வாழ்த்துகள்!" என்று வார்னர் வாழ்த்தியுள்ளார்.
அடுத்து ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், காயம் காரணமாக டேவிட் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.