

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியானவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன்தான் எனக் கூறி தனக்கு வழங்கப்பட்ட விருதை அவரிடம் கொடுத்து சக வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தவறவிட்டாலும், டி20 தொடரை வென்று ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது. கடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் தமிழக வீரர் டி.நடராஜனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் சிட்னி மைதானத்தில் தனது துல்லியமான யார்க்கர், லென்த் பந்துவீச்சால் ஆஸி. பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடமாமல் கட்டுப்படுத்துவதும், ஆஸியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான்களுக்கு நிகராகப் பந்துவீச நடராஜன் முயன்றதும் சாதாரணமானதல்ல. கடந்த 3 போட்டிகளிலும் நடராஜன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா போன்ற அசுரத்தனமான அணிக்கு எதிராக கட்டுக்கோப்பாகப் பந்துவீசுவது எளிதான காரியமல்ல. அதை நடராஜன் கச்சிதமாக இந்தத் தொடர் முழுவதும் செய்தார்.
கடந்த 2-வது டி20 போட்டியிலேயே நடராஜனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். ஏனென்றால், நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இதில் நடராஜன் வீசிய 4 ஓவர்களில் 8 டாட் பந்துகள், ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க அனுமதித்தார். ஆனால், ஆட்டநாயகன் விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தனது பேட்டியில், ''எனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருது ஹர்திக் பாண்டியாவுக்குத்தான் உண்மையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர்தான் அதற்குத் தகுதியானவர். அவரால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைக்க முடிந்தது” எனப் புகழாரம் சூட்டினார்.
இச்சூழலில் 3-வது டி20 போட்டியிலும் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது நடராஜனுக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு உதாரணமாக, ஜென்டில்மேன் கேமிக்கு எடுத்துக்காட்டாக நடந்த ஹர்திக் பாண்டியா, தொடர் நாயகன் விருதுக்கு உரித்தானவர் நடராஜன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நடராஜனிடம் தனது தொடர் நாயகன் விருதை வழங்கி புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்தில், “இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடினீர்கள் நடராஜன். இந்திய அணிக்காக அறிமுகப் போட்டியில் களமிறங்கி, கடினமான நேரத்தில் அற்புதமான பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். உங்கள் திறமையையும், கடின உழைப்பையும் அறிமுகம் பேசுகிறது. என்னைப் பொறுத்தவரை தொடர் நாயகன் விருதுக்கு உரித்தானவர் நீங்கள்தான். வாழ்த்துகள் இந்திய அணிக்கு” எனத் தெரிவித்துள்ளார்.