‘என் தேசத்தின் முதல் தொடர் வெற்றி மறக்க முடியாதது’- தமிழக வீரர் நடராஜன் பெருமிதம்

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் டி.நடராஜன்: படம் | ஏஎன்ஐ.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் டி.நடராஜன்: படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

என் தேசத்தின் முதல் தொடரை வெற்றியை என்னால் மறக்க முடியாது, சிறப்பானது என்று இந்திய அணியின் இடம் பெற்ற தமிழக வீரர் டி. நடராஜன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்

தமிழக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். 3-வது ஒருநாள் போட்டியில் இடம் பெற்ற நடராஜன், அறிமுகப் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டி20 தொடரிலும் இடம்பெற்ற நடராஜன், முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் ஷார்ட், ஹென்ரிக்ஸ் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆனால், நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நடராஜனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியாவே பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. நாளை 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியில் தான் இடம் பெற்று முதல் டி20 தொடரை வென்றதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய அணி முதல் டி20 தொடரை வென்றுள்ளது என்னால் மறக்க முடியாதது, சிறப்பானது # டீம் இந்தியா” எனத் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல் லீக்கில் விளையாடிய நடராஜனின் திறமையைப் பார்த்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடராஜனுக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் பெயர் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. 13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்க்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன் என்றால் மிகையல்ல.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த நடராஜன், டெத்பவுலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நடராஜன் மீது மலைபோல் நம்பிக்கை வைத்து டேவிட் வார்னர் தொடர்ந்து வாய்ப்பளிக்க, அதைச் சிறிதும் பிசகாமல் காப்பாற்றினார். இதனால் சில போட்டிகளுக்குப் பின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் மாறினார்.

அனுபவமான பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு சன்ரைசர்ஸ் அணியில் வலு சேர்த்தவர் நடராஜன்.

அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிராக 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸை யார்க்கர் மூலம் நடராஜன் ஆட்டமிழக்கச் செய்தவிதம் ரசிகர்களால் மறக்க முடியாத விக்கெட்டாக இருந்து வருகிறது. ஐபிஎல் சீசனிலேயே மிகச்சிறந்த டெலிவரியாக நடராஜனுக்கு இது அமைந்துள்ளது.

ஆனால், இந்த முறை சன்ரைசர்ஸ் அணி, நடராஜனின் திறமையை அடையாளம் கண்டு அவரைப் பட்டை தீட்டியுள்ளது. நடராஜனின் அபாரமான பந்துவீச்சு திறமையால், முதல் முறையாக ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in