

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலியுடன் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் இணைந்தார்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் அவருடன் வில்லியம்ஸனும் இணைந்தார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 2-வது இடத்தையும், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார். மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 251 ரன்கள் குவித்ததையடுத்து நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் 74 புள்ளிகள் பெற்று 812லிருந்து 886 புள்ளிகளுக்கு உயர்ந்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்ஸன் சதம் அடித்தாலோ அல்லது அரை சதம் அடித்தாலோ நிச்சயம் கோலியை முந்திவிடுவார். அதேசமயம், ஆஸ்திரேலிய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.
இதில் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார். ஆதலால், இந்த ஒரு போட்டியில் கோலி தனது தரவரிசையை உயர்த்த சதம் அடித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தரவரிசையில் பின்னடைவைச் சந்திக்க நேரலாம்.
நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டாம் லாதம் 733 புள்ளிகளுடன் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை சத்தீஸ்வர் புஜாரா தொடர்ந்து 7-வது இடத்தில் நீடிக்கிறார். 8-வது இடத்தில் பென் ஸ்டோக்ஸும், 9-வது இடத்தில் ஜோ ரூட்டும் உள்ளனர். 4,5,6 இடங்களில் முறையே ஆஸி.யின் லாபுஷேன், பாகிஸ்தானின் பாபர் ஆஸம், டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜின்கயே ரஹானே 11-வது இடத்திலும், மயங்க் அகர்வால் 12-வது இடத்துக்கும் சரிந்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் உள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 779 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 11-வது இடத்தில் உள்ளார். ஷமி 13-வது இடத்திலும், இசாந்த் சர்மா 17-வது இடத்திலும், ஜடேஜா 18-வது இடத்திலும் உள்ளனர்.
முதலிடத்தில் பாட்கம்மின்ஸ், 6-வது இடத்தில் மிட்ஷெல் ஸ்டார்க், 10-வது இடத்தில் ஹேசல்வுட் ஆகியோர் உள்ளனர். வரும் 17-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்குப் பின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மாற்றம் ஏற்படக்கூடும்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 3-வது இடத்திலும், அஸ்வின் 6-வது இடத்திலும் உள்ளனர்.