

கிரிக்கெட் விளையாட்டுக்கு பிராட்மேன், கால்பந்துக்கு பீலே போன்று ஹாக்கி விளையாட்டின் பிதாமகனாக கருதப்படுபவர் இந்திய வீரரான தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது. அந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தியான் சந்த்.
1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் பெற முக்கிய காரணமாக இருந்தவர் தியான் சந்த். இத்தொடரில் மட்டும் அவர் 14 கோல்களை அடித்தார். 1935-ம் ஆண்டு அடிலெய்ட் நகரில் இவர் ஆடிய ஹாக்கி போட்டி ஒன்றை பார்க்கவந்த டான் பிராட்மேன், “கிரிக்கெட்டில் ரன்களைக் குவிக்கும் வேகத்தில் தியான் சந்த் கோல்களை அடிக்கிறார்” என்று புகழ்ந்தார்.
தான் விளையாடும் போட்டிகளிலெல்லாம் கோல் மழை பொழிந்துவந்த தியான் சந்த், ஒரு போட்டியில் மட்டும் கோல் அடிக்கவில்லை. இப்போட்டி முடிந்ததும் நடுவரிடம் சென்ற தியான் சந்த், “கோல் போஸ்ட்களின் அகலம் சில அங்குலங்கள் குறைவாக உள்ளன” என்று புகார் செய்தார். தான் கோல் அடிக்க முடியாததால்தான் தியான் சந்த் இப்படி புகார் செய்கிறார் என்று நடுவர் முதலில் நினைத்தார். ஆனால் பிறகு கோல்போஸ்ட்டை அளந்து பார்த்தபோது நிஜமாகவே அதன் அகலம் சற்று குறைவாக இருந்துள்ளது. இந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டைப் பற்றி மட்டுமின்றி, ஹாக்கி மைதானத்தைப் பற்றியும் நுட்பமாக அறிந்தவராக தியான் சந்த் இருந்துள்ளார்.
பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தியான் சந்தின் ஆற்றலைப் பார்த்து வியந்த ஹிட்லர், அவர் ஜெர்மனிக்கு வந்தால் அந்நாட்டு குடியுரிமை வழங்கி, ஜெர்மன் ராணுவத்தில் மரியாதைக்குரிய பதவியையும் வழங்குவதாக அறிவித்தார். ஆனால் தியான் சந்த் அதை ஏற்காமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டார்.