Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

ஆஸி.யுடன் இன்று மீண்டும் மோதல்- டி20 தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று மதியம் நடைபெறுகிறது.

கான்பெராவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்திருந்தது. இதனால் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தது. பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினர். அதிலும் ஜடேஜா கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன் குவித்ததன் காரணமாகவே வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது.

அந்த ஆட்டத்தில் மூளையதிர்ச்சி காரணமாக பீல்டிங்கின் போது ஜடேஜா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக களமிறங்கிய யுவேந்திர சாஹல் அற்புதமாக பந்து வீசி ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தார். அறிமுக வீரராக களமிறங்கிய தமிழகத்தின் டி.நடராஜனும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார்.

ஜடேஜா மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளதால் எஞ்சிய 2 ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் மொகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட கூடும். அவருக்கு பதில் ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்க வாய்ப்பு உள்ளது.

முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட தவறிய ஷிகர் தவண், விராட் கோலி, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லலாம் என்பதால் இவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட கூடும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பந்து வீச்சின் போது 18 ஓவர்கள் வரை ஆட்டத்தை கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தது. கடைசி இரு ஓவர்களில் அந்த அணி 34 ரன்களை தாரை வார்த்திருந்தது. அதிலும் ஜோஸ் ஹேசல்வுட் வீசிய 19-வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் விளாசப்பட்டிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணியின் பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் ஆட்டத்தில் காயம் அடைந்த ஆஷ்டன் அகருக்கு பதிலாக நேதன் லயன் எஞ்சிய 2 ஆட்டங்களுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேப்டன் ஆரோன் பின்ச் இடுப்பு பகுதியில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம்தான். அவர் களமிறங்காத பட்சத்தில் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்த கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலிய அணி கவனமுடன் செயல்பட கூடும்.

இன்றைய ஆட்டம்

நேரம்: மதியம் 1.40

நேரலை: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x