

டிம் சவுதி, ஜேமிஸன், வாக்னர், ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சால், ஹேமில்டனில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி ஒரே நாளில் 15 விக்கெட்டுகளை இழந்தது இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி நகர்ந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள் அணி, தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்துள்ளது.
இன்னும் 185 ரன்கள் பின்தங்கியுள்ள மே.இ.தீவுகள் அணியின் வசம்3 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. இதில் பேட்மேன்கள் யாரும் இல்லை என்பதால், நாளைய ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறிதான். விக்கெட் கீப்பர் டோவ்ரிச் கைவிரல் காயத்தில் இருப்பதால் அவர் பேட் செய்வாரா எனத் தெரியவில்லை.
கேன் வில்லியம்ஸனின் மாரத்தான் இரட்டை சதத்தால் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
2-ம்நாளான நேற்றை ஆட்டத்தின் முடிவில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்திருந்தது. கேம்பெல் 22 ரன்களிலும், பிராத்வெய்ட் 20 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-ம் நாள் ஆட்டத்தை கேம்பெல், பிராத்வெய்ட் தொடர்ந்தனர். காலை நேரப் பனி, ஈரப்பதத்தைப் பயன்படுத்திக்கொண்ட நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் டிம் சவுதி, போல்ட்,ஜேமிஸன் மூவரும் மே.இ.தீவுகள் பேட்ஸமேன்களை திணறவிட்டு மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
காலை தேநீர் இடைவேளைக்குள் மே.இ.தீவுகள் அணியின் கேம்பெல்(26), ப்ரூக்ஸ்(1), பிராத்வெய்ட்(21) ஆட்டமிழந்தனர். அதன்பின் நடுவரிசையிலும் பின்வரிசையும் எந்த வீரர்களும் நிலைத்து ஆடவில்லை. பிராவோ(9), சேஸ்(11), பிளாக்வுட்(23), ஜோஸப்(0), ரோச்(1), கேப்ரியல்(1) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
53 ரன்கள் வரை விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இருந்த மே.இ.தீவுகள் அணி, அடுத்த 26 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 119 ரன்கள் வரை 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் அடுத்த 19 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்ததால் முதல் இன்னிங்ஸ் முடிவுற்றது.
மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 64 ஓவர்களில் 138 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட் கீப்பர் டோவ்ரிச்சுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் 138 ரன்களுக்கு மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ் முடிந்தது.
நியூஸிலாந்து தரப்பில் சவுதி 4 விக்கெட்டுகளையும், ஜேமிஸன், வாக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
381 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை மே.இ.தீவுகள் தொடங்கியது.ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. காற்றின் ஈரப்பதம், குளிர் ஆகியவற்றை பயன்படுத்திய நியூஸி பந்துவீச்சாளர்கள் துல்லியமான பந்துவீசி மே.இதீவுகள் பேட்ஸமேன்களை மிரட்டனர்.
2-வது இன்னிங்ஸிலும் நியூஸிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மாலை தேநீர் இடைவேளைக்குள் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மே.இ.தீவுகள் இழந்தது.
பிராத்வெய்ட்(10), கேம்பெல்(2), பிராவோ(12),ப்ரூக்ஸ்(2) ஆகியோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்த சிறிது நேரத்தில் ரஸ்டன் சேஸ்(6) ஹோல்டர்(8) ரன்களில் வெளியேறினர். 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
7-வது விக்கெட்டுக்கு அல்சாரி ஜோஸப், பிளாக்வுட் கூட்டணி சேர்ந்து அணியை மீட்டனர். நிதானமாகஆடிய பிளாக்வுட், ஜோஸப் இருவரும் அரைசதம் அடித்தனர். பிளாக்வுட் 80 ரன்னிலும், ஜோஸப் 59 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இருவரும் சேர்ந்து 106 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்து களத்தில் உள்ளனர். இன்னிங்ஸ் வெற்றியே இன்றே நியூஸிலாந்து பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து தடை போட்டனர்.
இன்னும் 185ரன்கள் பின்தங்கிய நிலையில் மே.இதீவுகள் வசம் இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமேஇருக்கிறது. அடுத்துவரும் 3 வீரர்களும் பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் நாளை இன்னிங்ஸ் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.