விளையாட்டாய் சில கதைகள்: கப்பர் சிங்கின் பிறந்த நாள்

விளையாட்டாய் சில கதைகள்: கப்பர் சிங்கின் பிறந்த நாள்
Updated on
1 min read

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த 8 ஆண்டுகளாக பட்டையை கிளப்பி வரும் ஷிகர் தவனின் பிறந்தநாள் இன்று
(டிசம்பர் 5). டெல்லியின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக விளங்கிய தாரக் சின்ஹா என்பவரிடம் சிறு வயதில் இருந்தே பயிற்சி பெற்றுள்ளார் ஷிகர் தவன். டெல்லியில் சிறந்த வீரராக இருந்தாலும், இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாததால் கவலையில் இருந்த தாரக் சின்ஹா, தன் சிஷ்யனை வைத்து அந்தக் கவலையை தீர்க்க முடிவெடுத்தார். அப்போதெல்லாம் ஷிகர் தவனுக்கு விக்கெட் கீப்பிங்கில்தான் ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் அதை விடுத்து பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார் தாரக் சின்ஹா. அதன்படி ஷிகர் தவனும், பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினார்.

2004-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவன்தான் ஹீரோ. இத்தொடரில் அவர் 505 ரன்களைக் குவித்துள்ளார் (இன்றுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை). இதைத் தொடர்ந்து ரஞ்சி போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இவரை விட்டுவிட்டு, விராட் கோலியை தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்க, மனமுடைந்த தவன், கிரிக்கெட்டை விட்டே விலக முடிவெடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவரது பயிற்சியாளர்தான் ஆறுதல் கூறி தேற்றியுள்ளார். இதனால் பொறுமையாக காத்திருந்த தவனுக்கு, 2010-ம் ஆண்டு அணியில் இடம் கிடைத்தது.

மைதானத்தில் பீல்டிங் செய்யும்போது, புகழ்பெற்ற இந்திப் படமான ‘ஷோலே’வில் இடம்பெற்றுள்ள வசனங்களைச் சொல்லி சக வீரர்களை உற்சாகப்படுத்துவது ஷிகர் தவனின் வழக்கம். அதனால் அவரை சக வீரர்கள் ‘கப்பர் சிங்’ (இப்படத்தில் அம்ஜத் கான் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர்) என செல்லமாக அழைப்பார்கள். கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக தவனுக்கு அதிகம் பிடித்த விஷயம் டாட்டூக்கள். தன் உடலில் பல உருவங்களை இவர் பச்சை குத்தி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in