Last Updated : 31 Oct, 2015 08:37 PM

 

Published : 31 Oct 2015 08:37 PM
Last Updated : 31 Oct 2015 08:37 PM

சச்சினை கேலி செய்த மைக்கேல் கிளார்க்குக்கு பதிலடி: சேவாக் உணர்ச்சிப் பகிர்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக், கடைசி போட்டியை ஆடி விடைபெறும் வாய்ப்பு பெறாதது நெஞ்சை விட்டு அகலாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா டிவி-யின் ஆப் கி அதாலத் நிகழ்ச்சியில் பேசிய சேவாக் கூறியதாவது:

“அணித் தேர்வாளர்கள் என்னை நீக்கப்போவதாக முன் கூட்டியே கூறியிருந்தால், டெல்லியில் கடைசி போட்டியில் ஆடிவிடுகிறேன் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்திருப்பேன். ஆனால், எனக்கு அவர்கள் அந்த வாய்ப்பையே வழங்கவில்லை.

விளையாடும்போதே கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி, பிரியாவிடை அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததின் சோகமும் வருத்தமும் என் நெஞ்சை விட்டு அகலாது, எனினும் இதெல்லாம் ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையில் சகஜம். விளையாடும் போது எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ஒருவர் எப்போதும் உணர்வதில்லை, ஆனால் அணியிலிருந்து நீக்கப்படும்போதுதான் ஓய்வு குறித்த சிந்தனை ஏற்படுகிறது.

நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்: நாட்டுக்காக 12-13 ஆண்டுகள் விளையாடிய ஒரு வீரர் தனது பிரியாவிடை போட்டிக்கு தகுதியற்றவரா?

ஆனால், தற்போது டெல்லியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கேள்விப்படுகிறேன், அது உண்மையெனில் நல்லது. பிசிசிஐ செய்ய முடியவில்லை எனில் டெல்லி கிரிக்கெட் சங்கம் செய்ய வேண்டும். இது என்னைப்பற்றிய விவகாரம் மட்டுமல்ல ஓய்வு பெறும் ஒவ்வொரு வீரரும் பிரியாவிடை கொடுத்து விடை பெற வேண்டும்.

ஒரு வீரர் தொடர்ச்சியாக 4 அல்லது 5 போட்டிகளில் சரியாக ஆடவில்லையெனில் அவர் ஜூனியராக இருந்தாலும் சீனியராக இருந்தாலும் நீக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை” என்று கூறினார் சேவாக்.

மேலும் அவர் சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டபோது, “ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் நானும் சச்சினும் பேட் செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் மைக்கேல் கிளார்க் அணியில் சேர்க்கப்பட்டிருந்த புதிய வீரர். அவர் சச்சினை நோக்கி அடிக்கடி, ‘உங்களுக்கு வயதாகி விட்டது, உங்களால் பீல்ட் செய்ய முடியாது, உங்களால் அதைச் செய்ய முடியாது, இதைச் செய்ய முடியாது என்று தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தார்.

நான், கிளார்க்கிடம் சென்று அவரது வயதைக் கேட்டேன். அவர் 23 என்றார். நான் அவரிடம் கூறினேன், உன் வயதை விட அதிக சதங்களை எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர் என்றேன்.

'பாகிஸ்தானுடன் ஆடியிருக்க வேண்டும்'

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இன்னும் 2 தொடர்களை ஆடியிருந்தால் நான் 10,000 டெஸ்ட் ரன்களை நிறைவு செய்திருப்பேன். நான் 8,586 ரன்களை எடுத்துள்ளேன். ஆனால் 2006க்கு பிறகு பாகிஸ்தானுடன் தொடர்கள் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக எனது பேட்டிங் சராசரி 90 ரன்களுக்கும் மேல்.

பாகிஸ்தானுடன் அதிக அளவில் ரன் எடுக்கக் காரணம் இரு நாடுகளுக்கும் இடையே விளையாட்டில் உள்ள ஒரு எதிரித்தன்மையே. மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி வழியும். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரிக்கப் படாத இந்தியாவின் ஒருபகுதியாக பாகிஸ்தான் இருந்தது. இதனாலேயே பகைமை பெரிய அளவில் இருந்தது, ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருந்தார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார் சேவாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x