

தரம்சலாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைய அந்த ஆட்டத்தில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
தரம்சலா போட்டியின் புள்ளி விவரங்கள் சில...
டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரரானார் விராட் கோலி. மேலும் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியவர் என்ற சாதனையையும் கோலி நிகழ்த்தினார். 27 இன்னிங்ஸ்களில் இவர் இந்த ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்பாக 1000 ரன்களை டி20-யில் எட்டிய வீரர்களைக் காட்டிலும் 5 இன்னிங்ஸ்கள் குறைவாக விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டி சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், கெவின் பீட்டர்சன் டி20 1000 ரன்களை 32 இன்னிங்ஸ்களில் கடந்தனர். இந்திய வீரர்களில் டி20-யில் 1000 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மென் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் டி20 சராசரி 57.40. 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் 2 அரைசதங்களுடன் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 287 ரன்களை எடுத்துள்ளார். ஒரு எதிரணிக்கு எதிராக குறைந்தது 150 ரன்கள் எடுத்த வீரர்களை எடுத்துக் கொண்டால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மாதான் அதிக சராசரி வைத்துள்ள வீரராகிறார்.
2007 உலகக் கோப்பைக்கு பிறகு டி20-யில் 200 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக துரத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010 டி20 உலகக் கோப்பையில் ரெய்னா எடுத்த சதத்துக்குப் பிறகு டி20 சதம் கண்ட 2-வது இந்திய வீரரானார் ரோஹித் சர்மா.
டி20 கிரிக்கெட்டில் 8 அரைசதங்கள் கண்ட டுமினி, நேற்று 28 பந்துகளில் அரைசதம் கண்டது அவரது அதிவேக அரைசதமாகும்.
2007 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் சேவாக்-கம்பீர் ஜோடி 136 ரன்களை சேர்ந்து எடுத்த பிறகு தற்போது டி20-யில் அதிக ரன்களை ஜோடி சேர்ந்து குவித்த ஜோடியானது விராட் கோலி-ரோஹித் சர்மா ஜோடி. இவர்கள் நேற்று 138 ரன்களை எடுத்து புதிய இந்திய சாதனை நிகழ்த்தினர்.
இந்திய அணியின் 199 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் 4-வது அதிகபட்ச ஸ்கோராகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010 டி20 உலகக் கோப்பையில் எடுத்த 186 ரன்களை நேற்று இந்தியா கடந்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சில் இந்திய அணியினர் நேற்று 11 சிக்சர்களை அடித்தனர். டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த அணியாகத் திகழ்கிறது இந்தியா. இதற்கு முன்னதாக மே.இ.தீவுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 12 சிச்கர்களை ஒரு இன்னிங்ஸில் அடித்து சாதனையை வைத்துள்ளனர்.
பவர் பிளேயில் நேற்று தென் ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை 2-வது மோசமான பவர் பிளே ரன் வழங்குதலாகும் இது, இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்களை பவர் பிளேயில் இந்தியா விட்டுக் கொடுத்தனர்.
நேற்றைய போட்டியில் மொத்தம் 20 சிக்சர்கள். இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இதுவே அதிகம்.
டுமினி நேற்று 7 சிக்சர்களை விளாசினார். இந்தியாவுக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேனானார் டுமினி.