கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஆப்கான் வீரருக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வீரரும், ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளருமான முஜிப் உர் ரஹ்மான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ரஹ்மான் விளையாடி வருகிறார். கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, ரஹ்மான், குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக டி20 பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலி்ல் 2-வது இடத்தில் உள்ள 19வயது முஜிபுர் ரஹ்மான் கடந்த வாரம் காபூலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய கட்டுப்பாடு இருப்பதால், பிரிஸ்பேனில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள ஹோட்டலில் முஜிப் உர் ரஹ்மான் தனிமைப் படுத்தப்பட்டார்

ஆனால் ஹோட்டலில் தங்கிய சில நாட்களிலேயே ரஹ்மானுக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, அவருக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா தொற்றால் ரஹ்மான் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து பிரிஸ்பேன் ஹீட் நிர்வாகத்தினர் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “ முஜிப் உர் ரஹ்மான் உடல்நலம் பெறுவதுதான் அணி நிர்வாகத்துக்கு முக்கியம்.

பிக் பாஷ் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி போட்டியை ஒற்றுமையுடன் நடத்தவும், ரஹ்மானின் உடல்நலத்தை குணப்படுத்தவும் தேவையான பணிகளைச் செய்வோம். எங்கள் அணியின் வீரர்கள், உதவிப் பணியாளர்களின் நலனுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்போம்.

முஜிப் ரஹ்மானும், அணி நிர்வாகமும் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டி20 தொடரான பிக்பாஷ் லீக் டி20 தொடர் வரும் 10-ம் தேதி தொடங்கி, ஜன.26-ம் தேதி வரை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in