

கேன் வில்லியம்ஸனின் அற்புதமான இரட்டைச் சதத்தால் ஹேமில்டனில் நடந்துவரும் மே.இ.தீவுகள் அணிக்கான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்ஸன் 556 நிமிடங்கள், 135 ஓவர்கள் பேட் செய்து இரட்டைச் சதம் அடித்து 251 ரன்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் கணக்கில் 2 சிக்ஸர்கள், 34 பவுண்டரிகள் அடங்கும். 5-வது ஓவரில் களமிறங்கிய வில்லியம்ஸன் 142 ஓவரில் ஆட்டமிழந்தார்.
நியூஸிலாந்து அணியின் ஸ்கோரில் பாதி எண்ணிக்கை வில்லியம்ஸன் அடித்ததாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வில்லியம்ஸன் அடிக்கும் 3-வது இரட்டைச் சதம் மற்றும் அதிகபட்சமும் இதுவாகும். கடந்த ஆண்டு இதே ஆடுகளத்தில் வில்லியம்ஸன் இரட்டைச் சதம் அடித்த நிலையில் இந்த ஆண்டும் இரட்டைச் சதம் அடித்துள்ளார்.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் மே.இ.தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி தனது முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்துள்ளது. கேம்பெல் 22 ரன்களிலும், பிராத்வெய்ட் 20 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 470 ரன்கள் பின்தங்கிய நிலையில் மே.இ.தீவுகள் அணி இருக்கிறது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் ஃபீல்டிங் செய்யத் தீர்மானித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் சேர்த்தது. வில்லியம்ஸன் 97 ரன்களுடனும், டெய்லர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-வது விக்கெட்டுக்கு டாம் லாதம், வில்லியம்ஸன் கூட்டணி 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாகினர்.
2-வது நாளான இன்று இருவரும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். வில்லியம்ஸன் 224 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். அடுத்த சிறிது நேரத்தில் கேப்ரியல் பந்துவீச்சில் டெய்லர் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 83 ரன்கள் சேரத்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த நிகோலஸ் (7), பிளென்டல் (14), மிட்ஷெல் (9) ஆகியோரின் விக்கெட்டுகளை மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் விரைவாக வீழ்த்தியபோதிலும் வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தனது அனுபவமான ஆட்டத்தால் வில்லியம்ஸன் ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். 306 பந்துகளில் 150 ரன்களை வில்லியம்ஸன் எட்டினார்.
7-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், ஜேமிஸன் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். இருவரும் சேர்ந்து 94 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். வில்லியம்ஸன் 369 பந்துகளில் தனது 3-வது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். 411 பந்துகளில் 250 ரன்களை எட்டினார்.
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸன் பேட்டிங்கில் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை. வில்லியம்ஸனை ஆட்டமிழக்கச் செய்ய மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கு எந்தப் பலனையும், பேட்டிங்கில் தவறையும் வில்லியம்ஸன் செய்யாமல் ஆடினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பந்துகளில் ஷாட்களை ஆடி பவுண்டரிகளை வில்லியம்ஸன் குவித்தார். கேமர் ரோச் பந்தில் ஒரு ரன் எடுத்ததால் சதத்தை நிறைவு செய்த வில்லியம்ஸன், ரோச் பந்துவீச்சில் கவர் டிரைவில் பவுண்டரி அடித்துதான் தனது இரட்டைச் சதத்தையும் நிறைவு செய்தார்.
மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸன் 251 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேமிஸன் 51 ரன்களிலும், சவுதி 11 ரன்களிலும் களத்தில் இருந்தபோது, நியூஸி கேப்டன் வில்லியம்ஸன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர் ரோச் இந்தப் போட்டியில் முக்கிய மைல்கல்லை எட்டினார். ஆன்டி ராபர்ட்ஸின் 202 விக்கெட் சாதனையை முறியடித்து, அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 8-வது இடத்தை ரோச் பிடித்தார்.
145 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. மே.இ.தீவுகள் தரப்பில் கேப்ரியல், கேமர் ரோச் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.