

இந்திய அணிக்காக நான் களமிறங்கி விளையாடிய அனுபவம் கனவு போன்றது. தொடர்ந்து பல போட்டிகளில் விளையாட விருப்பமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரும், தமிழக வீரருமான டி.நடராஜன் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் டிஎன்பிஎல் தொடரில் விளையாடியபோது ஐபிஎல் நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்தார். 2017-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற்றபோதிலும் பெருமளவு நடராஜன் பெயர் ஐபிஎல் ரசிகர்களால் உச்சரிக்கப்படவில்லை.
டிஎன்பிஎல் லீக்கில் விளையாடிய நடராஜனின் திறமையைப் பார்த்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடராஜனுக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் பெயர் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. 13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்க்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன் என்றால் மிகையல்ல. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த நடராஜன், டெத்பவுலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நடராஜன் மீது மலைபோல் நம்பிக்கை வைத்து டேவிட் வார்னர் தொடர்ந்து வாய்ப்பளிக்க, அதைச் சிறிதும் பிசகாமல் காப்பாற்றினார். இதனால் சில போட்டிகளுக்குப் பின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் மாறினார்.
அனுபவமான பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு சன்ரைசர்ஸ் அணியில் வலு சேர்த்தவர் நடராஜன்.
அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிராக 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸை யார்க்கர் மூலம் நடராஜன் ஆட்டமிழக்கச் செய்தவிதம் ரசிகர்களால் மறக்க முடியாத விக்கெட்டாக இருந்து வருகிறது. ஐபிஎல் சீசனிலேயே மிகச்சிறந்த டெலிவரியாக நடராஜனுக்கு இது அமைந்துள்ளது.
ஆனால், இந்த முறை சன்ரைசர்ஸ் அணி, நடராஜனின் திறமையை அடையாளம் கண்டு அவரைப் பட்டை தீட்டியுள்ளது. நடராஜனின் அபாரமான பந்துவீச்சு திறமையால், முதல் முறையாக ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், லாபுஷேன், ஆஸ்டின் அகர் ஆகிய 2 விக்கெட்டுகளையும் நடராஜன் வீழ்த்தினார்.
இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடிய தருணம் குறித்து டி.நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்திய தேசத்துக்காக நான் களமிறங்கிய அனுபவம் எனக்குக் கனவு போன்றது. எனக்கு வாழ்த்துத் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்தடுத்த போட்டிகளில் இடம்பெற விரும்புகிறேன். அதிகமான சவால்களை எதிர்நோக்குகிறேன்” என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.