

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கெனவே தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
303 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினர். 6-வது ஓவரில் நடராஜன், லபூஷக்னேவை வெளியேற்றினார். இதன் பிறகு ஸ்மித் களமிறங்கினாலும் பெரும்பாலான பந்துகளை கேப்டன் ஆரோன் பின்ச்சே எதிர்கொள்ளும்படி ஆனது. 11-வது ஓவரில் 7 ரன்களுக்கு ஸ்மித் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூரின் இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
தேவைப்படும் சராசரி ரன்களை விடக் குறைவான ரன்களே எடுத்து வந்தாலும் விக்கெட் இழக்காமல் ஆட வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தியது. 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் பேட்ஸ்மேன் அவசரம் காட்டவில்லை.
இதன் பிறகு வேகமாக ரன் சேர்க்கும் முயற்சியில் பின்ச்சும், ஹென்ரிக்கஸ்ஸும் இறங்கினர். இதில் ஹென்ரிக்கஸ் 22 ரன்களுக்கு தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் பின்ச்சும் (75 ரன்கள்), கேமரூன் க்ரீனும் (21 ரன்கள்) ஆட்டமிழந்தனர்.
31-வது ஓவர் முடிவில் 159 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. மீதமுள்ள 19 ஓவர்களில் 144 ரன்கள் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல் களமிறங்கினார். கடந்த இரண்டு போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் மேக்ஸ்வெல்லின் விளாசல் தொடர்ந்தது. மறுமுனையில் அலெக்ஸ் கேரே அவருக்குத் துணை நிற்க, வெற்றி இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்தது ஆஸ்திரேலியா.
கேரே 38 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதன்பின் ஆட வந்த ஆஷ்டன் அகரும் சூழலின் தேவைக்கேற்ப விளாசல் ஆட்டத்தையே தொடர்ந்தார். 10 ஓவர்களில் 76 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்த இரண்டு ஓவர்களில் வெறூம் 7 ரன்களை மட்டுமே இந்தியப் பந்துவீச்சு விட்டுக்கொடுத்தது.
நடராஜன் வீசிய 44-வது ஓவரில் 1 சிக்ஸ், 2 பவுண்டரி என மொத்தமாக 18 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் ஈடுகட்ட முயன்றனர். இதற்கு அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் பும்ராவின் பந்தில் போல்டானார். 46-வது ஓவரைக் கட்டுப்பாடாக வீசிய நடராஜன் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். 47-வது ஓவரின் கடைசியில் அபாட்டும், 48-வது ஓவரின் முதல் பந்தில் அகரும் ஆட்டமிழக்க, ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்துபோனது.
2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்கிற நிலையில் கையில் 1 விக்கெட்டை மட்டுமே மீதம் வைத்திருந்த ஆஸ்திரேலிய அணி 49-வது ஓவரில் 6 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் ஸாம்பா ஆட்டமிழக்க 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.