

டென்னிஸ் விளையாட்டின் அதிசயக் குழந்தையாக கருதப்பட்ட மோனிகா செலஸின் பிறந்தநாள் இன்று. யுகோஸ்லாவியாவில் 1973-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி மோனிகா செலஸ் பிறந்தார். 5-வது வயது முதல் தன் தந்தையிடம் டென்னிஸ் பயிற்சியைத் தொடங்கினார். தன் மகளின் பயிற்சிக்காக ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார் மோனிகாவின் தந்தை கரோல்ஜி செலஸ். அங்கு ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் ஆடிவந்த மோனிகா செலஸ், தனது 13-வது வயதில் நம்பர் 1 ஜூனியர் டென்னிஸ் வீராங்கனையானார்.
பிரெஞ்ச் ஓபனில் 1990-ம் ஆண்டில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் மோனிகா செலஸ். அப்போது அவரது வயது 16. இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் மிக இள வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர் வெற்றிகளைப் பெற்ற மோனிகா செலஸ், 9 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை மிகக் குறுகிய காலத்தில் வென்றார். 1990 முதல் 1993 வரை டென்னிஸ் உலகில் மோனிகாவின் ஆதிக்கம்தான். இந்தச் சமயத்தில்தான் வெறிகொண்ட ஒரு ரசிகரின் பார்வை மோனிகா மீது விழுந்தது. தனக்கு மிகவும் பிடித்தமான வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மோனிகா செலஸ் தடையாக இருப்பதாக நினைத்த அந்த ரசிகன், ஜெர்மனியில் நடந்த டென்னிஸ் போட்டியின்போது மைதானத்துக்குள் நுழைந்து மோனிகாவின் முதுகில் கத்தியால் குத்தினார். இந்த தாக்குதலில் இருந்து மோனிகா உயிர் பிழைத்தாலும், அவரால் முன்புபோல் டென்னிஸ் போட்டிகளில் ஆட முடியவில்லை. இதனால் ஒரு தரமான வீராங்கனையின் ஆட்டத்தை டென்னிஸ் உலகம் இழந்தது.