

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை ஐசிசி ஆதரிப்பதாகவும், ஆனால் அது நடப்பதை உறுதி செய்ய முடியாது என்றும் ஐசிசி புதிய தலைவர் ஜான் பார்க்லே கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மட்டும் பங்குபெறும் கிரிக்கெட் தொடர்கள் இரு நாட்டு அரசியல் சூழலை வைத்தே முடிவு செய்யப்படும். இந்த இரு அணிகளும் கடைசியாக டெஸ்ட் தொடரில் விளையாடியது 13 வருடங்களுக்கு முன்னால். 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அதற்கு முந்தைய வருடம் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்தது.
இதன்பின் 2012ஆம் ஆண்டு ஒரு ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காகவும், 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிக்காகவும் பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையில் பதற்றம் நிலவுவதால் எந்த விதமான கிரிக்கெட் தொடரும் திட்டமிடப்படவில்லை.
"இதற்கு முன்னால் இருந்ததைப் போல இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது கிரிக்கெட் உறவைத் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் புவி-அரசியல் பிரச்சினைகள் என்ன என்பதும் எனக்குத் தெரியும். அவை எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஐசிசியில் எங்களால் செய்ய முடியும் விஷயம் என்னவென்றால், ஒருவரது நாட்டில் இன்னொருவர் வந்து விளையாட ஏதுவாக உதவியும், ஆதரவும் கொடுப்பது மட்டுமே.
இதைத் தாண்டி வேறெந்த விஷயத்தையும் நடத்திக் காட்டும் அதிகாரம், செல்வாக்கு எனக்கு இல்லை. அது எங்களது செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயம்" என்று பார்க்லே கூறியுள்ளார்.
அடுத்த வருடம் ஐசிசி டி20 உலகக் கோப்பையும், 2023ஆம் வருடம் 50 ஓவர் உலகக் கோப்பையும் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், விரைவில் மீண்டும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு வருவதைப் பற்றிய விவாதம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.