

இந்திய அணியின் மற்ற வீரர்கள் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும் என்றும், விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பால் எந்த அழுத்தமும் இல்லையென்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் ஆடிய ஒரு நாள் தொடரின் இரண்டு ஆட்டங்களில் மோசமான தோல்வியைச் சந்தித்துத் தொடரை இழந்தது. இதனால் இந்தியாவின் பந்துவீச்சு குறித்தும், கோலியின் தலைமை குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், "தலைமைப் பொறுப்பால் கோலி எந்தவித அழுத்தத்திலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு அந்தப் பொறுப்பு சுமையில்லை. அவருக்குச் சவால்கள் பிடிக்கும். அவர் ஒரு அணித் தலைவர். முன்னால் நின்று வழிநடத்தி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அணியை வெல்ல மற்றவர்கள் முயல வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்.
தலைமைப் பொறுப்பு அவரது ஆட்டத்தைப் பாதிக்கவில்லை. ஏனென்றால் ஒருவரால் மட்டுமே நன்றாக ஆடி ஆட்டத்தை வெல்ல முடியாதே. கே.எல்.ராகுல் இரண்டாவது ஆட்டத்தில் நன்றாக ஆடினார். ஆனால் இன்னும் சில வீரர்களும் அணிக்காகத் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். அப்போதுதான் விராட் கோலிக்கு இருக்கும் சுமை குறைந்து அவரால் திறந்த மன ஓட்டத்துடன் விளையாட முடியும்" என்று கூறியுள்ளார்.