Last Updated : 01 Dec, 2020 03:15 AM

 

Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: 21 ஓவர்களில் சுருண்ட இந்தியா

உலகப் போர் காரணமாக 1939 முதல் 1945 வரை சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் அதிகமாக நடைபெறவில்லை. இந்நிலையில் 1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடுமா, அல்லது பிரிட்டிஷ்காரர்களோடு கிரிக்கெட்டுக்கும் குட்பை சொல்லுமா என்ற கேள்வி அக்காலத்தில் எழுந்தது. ஆனால் இந்தியா கிரிக்கெட்டை விடவில்லை. மாறாக உள்ளூர் போட்டிகளை நிறைய நடத்தி, பல இளம் வீரர்களை உருவாக்கியது.

இந்தச் சூழலில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து 1947-ல் அழைப்பு வந்தது. கிரிக்கெட் உலகில் நிகரில்லாத சக்ரவர்த்தியாக டான் பிராட்மேன் ஆட்சி செய்த காலம் அது. வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த லாலா அமர்நாத்தின் தலைமையில், மங்கட், ஹசாரே, ஜே.கே.இரானி போன்ற வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. கிரிக்கெட் ஆடாமல் பல ஆண்டுகளாக காய்ந்து கிடந்த டான் பிராட்மேன், இந்திய அணி வருவதைக் கேள்விப்பட்டதும் புத்துணர்ச்சி பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முன் தனது ரன் வேட்கையை தீர்க்க ஆவலுடன் காத்திருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை அவர் குவித்தார். இதைத்தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடியது.

பிராட்மேனின் பேட்டிங்குக்கு நிகராக பந்துவீச்சில் இந்தியாவை துவட்டி எடுத்தார் எர்னி டோஷாக் என்ற பந்துவீச்சாளர் 2.3 ஓவர்களில் அவர் 5 விக்கெட்களை வீழ்த்த இந்திய அணி 21.3 ஓவர்களில் 58 ரன்களில் சுருண்டது. அந்த வகையில் குறைந்த ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆன நாட்களில் ஒன்றாக டிசம்பர் 1 விளங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x