Last Updated : 30 Nov, 2020 09:09 AM

1  

Published : 30 Nov 2020 09:09 AM
Last Updated : 30 Nov 2020 09:09 AM

மோசமான கேப்டன்ஷிப்; டி20 போட்டிக்கு என கோலி நினைக்கிறாரா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை: கவுதம் கம்பீர் விளாசல்

விராட் கோலி : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

டி20 போட்டிக்கு கேப்டன்ஷிப் செய்வதாக கோலி நினைத்துக் கொண்டிருக்கிறாரா? பும்ராவுக்கு தொடக்கத்தில் 2 ஓவர்களுடன் ஏன் நிறுத்தினார்? கோலியின் கேப்டன்ஷிப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வி அடைந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

இதில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில், 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது ஒருநாள் போட்டித் தோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து 2-வது ஒருநாள் தொடரையும் இழந்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஆடி தொடர்ந்து 2-வது சதத்தைப் பதிவு செய்தார். இந்தியாவுக்கு எதிராக 5-வது சதத்தையும் அடித்தார்.

கடந்த இரு போட்டிகளும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நொறுக்கி அள்ளினர். பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் மைதானத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பிரயத்தனம் எடுபடவில்லை.

2-வது ஒருநாள் போட்டியில் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு கூடுதலாக ஓவர்கள் வழங்காமல் 2 ஓவர்களுடன் கேப்டன் கோலி நிறுத்திவிட்டார். இந்நிலையில், கேப்டன் கோலியின் செயலை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிரிக்இன்போ தளத்துக்காக கவுதம் கம்பீர் நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியாதாவது:

''விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது எவ்வளவு முக்கியத்துவம். அப்படித் தொடக்கத்திலேயே வீழ்த்தினால்தான் வலிமையான ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையைத் தடுக்க முடியும். ஆனால், பும்ரா போன்ற முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கு 2 ஓவரோடு தொடக்கத்திலேயே நிறுத்துவது எப்படிச் சரியாகும்?

பொதுவாக ஒருநாள் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளருக்கு முதலில் 4 ஓவர்கள், அதன்பின் 3 ஓவர்கள், கடைசியில் 3 ஓவர்கள் எனப் பிரித்து வழங்குவார்கள். முதல் 10 ஓவர்களில் 4 ஓவர்களையாவது பும்ராவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், பும்ராவுக்கு 2 ஓவரோடு நிறுத்திவிட்டால், எவ்வாறு ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்? கோலி என்ன மாதிரி கேப்டன்ஷிப் செய்கிறார் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவரின் கேப்டன்ஷிப்பைப் பற்றி விளக்கமாகப் பேசக்கூட முடியாது. இது டி20 போட்டி என கோலி நினைத்துக் கொண்டிருக்கிறாரா? கோலியின் கேப்டன்ஷிப் மோசமானதாக இருக்கிறது.

6-வது பந்துவீச்சாளர் குறித்த பிரச்சினை ஏற்பட்டால், வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபே இருவரில் ஒருவரை அணிக்குள் கொண்டுவரலாம். பின்னர் எவ்வாறு ஒருநாள் போட்டியை அணுகமுடியும்? இருவரும் ஆஸ்திரேலியத் தொடருக்குச் செல்லவில்லை என்றால், அது தேர்வுக்குழுவின் மிகப்பெரிய தவறாகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் ஒருவர் குறித்த தீர்மானத்துக்கு வராதவரை சர்வதேச அளவில் அவர் எவ்வளவு சிறந்தவர் என்பதை நீங்கள் ஒருபோதும் கணிக்க முடியாது. இந்திய அணி இருவரையும் ஆஸ்திரேலியப் பயணத்துக்குத் தேர்வு செய்யவில்லை. இதனால் மிகப்பெரிய அடியுடனே இந்திய அணி திரும்பக்கூடும்''.

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x