

அசாமில் உள்ள இருபாரி பசார் கிராமத்தினருக்கும், காலா பஹாட் கிராமத்தினருக்கும் இடையே முன்பு அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இருபாரி பசார் கிராமத்து இளைஞர்கள் தான். இதற்கு முடிவுகட்ட விரும்பிய அவர்கள், தங்கள் ஊருக்கு ஒரு கராத்தே ஆசிரியரை அழைத்துவந்து பயிற்சி பெற்றனர்.
இப்படி பயிற்சி பெற்றவர்களில் ஒருவரான பதாம் தாபா, உள்ளூரில் மிகப்பெரிய கராத்தே வீரராக உருவெடுத்தார். தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டார். ஆனால் அவரால் பதக்கங்களை வெல்ல முடியவில்லை. தான் கண்ட கனவுகளை எல்லாம் தன் 2 மகன்கள் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார். அதே நேரத்தில் கராத்தேவை விட குத்துச்சண்டை போட்டியில்தான் அதிக புகழ் கிடைக்கும் என்பதால், அவர்களுக்கு அத்துறையில் பயிற்சி அளித்தார். அப்படி பயிற்சி அளிக்கப்பட்ட மகன்களில் ஒருவர்தான் இந்தியாவின் முன்னணி குத்துசண்டை வீரராக இருக்கும் ஷிவா தாபா.
சிறுவயதில் தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகளின் மீதுதான் ஷிவா தாபாவின் கவனம் இருந்தது. இந்த நிலையில்தான் மைக் டைசனின் குத்துச்சண்டை போட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தார். அவரது வேகமும் துடிப்பும், தானும் ஒரு குத்துச்சண்டை வீரனாக வேண்டும் என்ற கனவை ஷிவா தாபாவுக்குள் விதைத்தது.
அன்றிலிருந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார் ஷிவா தாபா. தினமும் காலை 3 மணிக்கு எழும் ஷிவா தாபா, 7 மணிவரை குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவார். அவருக்கு பயிற்சியளிப்பதற்காக குவாஹாட்டிக்கு இடம்பெயர்ந்த பதாம் தாபா, சொற்ப வருமானத்தில் மகன்களுக்கு பயிற்சியளித்தார். அவர்களும் ஏமாற்றவில்லை. மூத்தவர் மாநில அளவிலான போட்டிகளில் ஜெயிக்க, இளையவரான ஷிவா தாபா, பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.