

பிலிப்ஸின் காட்டடி சதம், கான்வேயின் அதிரடி அரை சதம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கானியில் இன்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வென்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது. 239 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 72 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. காட்டடி ஆட்டம் ஆடிய பிலிப்ஸ் 51 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து (8 சிக்ஸர், 10 பவுண்டரி) ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
தொடக்கத்திலிருந்தே மே.இ.தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்த பிலிப்ஸ் 22 பந்துகளில் அரை சதத்தையும், அடுத்த 24 பந்துகளில் அதாவது 46 பந்துகளில் சதத்தையும் எட்டினார். அவரின் சதத்தில் 88 ரன்களை 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் மூலமே பிலிப்ஸ் சேர்த்தார்.
239 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. 200 ரன்கள் எட்டிவிட்டாலே வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் 238 ரன்களை சேஸிங் செய்வது தோல்வியில்தான் முடியும் என்று மே.இ.தீவுகள் அணிக்குத் தெரிந்துவிட்டது.
இதனால், பவர்ப்ளே ஓவரில் ப்ளெட்சர் (20) கிங்ஸ் (0) ஆகிய 2 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் தடுமாறி 44 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன்பின் வந்த மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்களுக்கு சேஸிங் செய்வது மலைப்பாக இருந்ததால், தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
மே.இ.தீவுகள் தரப்பில் ஹெட்மயர், மேயர்ஸ் கூட்டணி 32 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோராகும். மற்ற வீரர்கள் ஒருவரும் சிறிது நேரம் கூட களத்தில் நிலைக்கவில்லை. மேயர்ஸ் (2), பூரன் (4) என 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் தடுமாறியது.
கேப்டன் பொலார்ட் வந்து அதிரடியாக ஆடினார். ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 4-வது சிக்ஸரை சான்ட்னர் பந்துவீச்சில் அடிக்க முயன்றபோது ஆட்டமிழந்தார். பொலார்ட் 28 ரன்களில் வெளியேறினார்.
107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த மே.இ.தீவுகள் அணி அடுத்த 34 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பாவெல் (9), ஆலன் (15), காட்ரெல் (1) ஹெட்மயர் (25) எனஅடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கீமோ பால் 26 ரன்களுடன் களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்களில் மே.இ.தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து தரப்பில் சான்ட்னர், ஜேமிஸன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முன்னதாக, நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கப்தில், ஷீபெர்ட் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும 49 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
6-வது ஓவரில் ஷீபெர்ட் 18 ரன்களில் தாமஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கப்தில் (34) ஆலன் ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பவர்ப்ளேவில் நியூஸி. அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ், கான்வே ஜோடி சேர்ந்தனர். இருவரும் அடித்து ஆடத் தொடங்கியபின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 11 ஓவரில் நியூஸிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய பிலிப்ஸ் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். கான்வே 31 பந்துகளில் அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.
பிலிப்ஸ் அடித்து ஆடத் தொடங்கியபின் பந்துகள் சிக்ஸருக்கும் பவுண்டரிகளுக்கும் பறந்தன. 46 பந்துகளில் பிலிப்ஸ் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார்.
ஏறக்குறைய 7 பந்துவீச்சாளர்களை கேப்டன் பொலார்ட் பயன்படுத்தியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. இறுதியில் 19 ஓவரை வீசிய பொலார்ட் 5-வது பந்தில் பிலிப்ஸ் (108) விக்கெட்டை சாய்த்தார். பிலிப்ஸ் 51 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கான்வே 65 ரன்களில் (37 பந்துகள் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது.