Published : 29 Nov 2020 09:39 AM
Last Updated : 29 Nov 2020 09:39 AM

'இந்திய அணியால் உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது'-மைக்கேல் வான் விளாசல்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

இந்திய அணியின் பேட்டிங் மிக பலவீனமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியால் உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியின் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திேரலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது. 375 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே சேர்த்து 66 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் 6-வது மற்றும் பகுதிநேரப் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாததே தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தாலும், அவர் பந்துவீசும் அளவுக்கு உடல் தகுதியுடன் இல்லை. இது இந்திய அணிக்குப் பெரும் பாதிப்பாக அமைந்தது. இதைச் சுட்டிக்காட்டியே முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி விளையாடியது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருந்தபோதிலும்கூட அவர் பந்துவீசும் அளவுக்கு உடல் தகுதியுடன் இல்லை.

இப்போதுள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் மிக பலவீனமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியால் உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது.

என்னைப் பொறுத்தவரை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. நான் தேர்வுக் குழுத் தலைவராகவோ, மேலாளராகவோ இருந்தால், 6-வது பந்துவீச்சாளரைத் தேடியிருப்பேன். பேட்டிங்கில் இருக்கும் பலவீனத்தைக் களைந்திருப்பேன்.

உலகக்கோப்பைப் போட்டிக்கு இன்னும் ஆண்டுகள் இருந்தாலும், இப்போதுள்ள இந்திய அணியை தயார்செய்து கொண்டு சென்றாலும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. 6-வது பந்துவீச்சாளர், பகுதிநேரப் பந்துவீச்சாளர், 7-வது பேட்ஸ்மேன் ஆகியவை இருந்தால்தான் அணியின் பேட்டிங் வரிசை ஸ்திரப்படும்.

ஐபிஎல் தொடர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீரர்களை அடையாளம் கண்டு, தற்போது அணியில் தேவைப்படும் இடத்துக்குத் தகுதியான வீரர்களைத் தேர்வு செய்யலாம்.

இந்திய அணியில் தற்போது முதல் 6 வரிசையில் உள்ள பேட்ஸ்மேன்கள் ஒருவருக்குக் கூட பந்துவீசத் தெரியாது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருந்தாலும், அவராலும் பந்துவீச முடியாது.

2023-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடக்கிறது. இந்தியச் சூழலில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதற்காக இப்போது இருந்தே அணியைத் தயார் செய்ய வேண்டும்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்போதுள்ள இந்திய அணி சரியான தேர்வு இல்லை. இந்த அணியை வைத்துக்கொண்டு உலகக் கோப்பையை வெல்ல முடியாது''.

இவ்வாறு மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x